Saturday, July 25, 2009

9. உயிர்தானே போகும்?

தலைவனும் தலைவியும் களவுக்காலத்தில் பலமுறை தனியிடங்களிற் கூடி மகிழ்வர். ஊர் மக்களில் சிலர் இதனை அறிந்தால் தமக்குள் பலவிடங்களில் சந்தித்துப் பலவாறு பேசுவர். இவ்வாறு சிலரும் பலரும் பேசுவதை 'அம்பல்' என்றும் 'அலர்தூற்றல்' என்றும் கூறுவர்.

தோழி ஒருத்தி தலைவன் பிரிந்து சென்றபின் தலைவி வருந்துவதைக் கண்டாள்; 'அவன் திரும்பிவந்து மணந்து கொள்ளும் வரை, உன்னால் அவன் பிரிவை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?' என்று வினாவினாள். அவளுக்குத் தலைவி கூறிய மறுமொழி இது:-

"சிறிய கடற்காகம் ஒன்று கடல் மீது பறந்து சென்று தன் செவ்வாயின் பேரலகினால் மீனைக் கொத்த முயன்றது. அப்போது எழுந்த பேரலை ஒன்று காக்கையின் மேல் மோதி அதன் முதுகையெல்லாம் ஈரமாக்கியது. நீர்த்திவலைகளால் ஈரமாகிய அக்காக்கை குளிரை வெறுத்து பூக்கள் பல நிறைந்த கரையிலேயே தங்கி விட்டது. இத்தகைய கடற்கரை ஊரைச் சேர்ந்தவன் நம் தலைவன். நம்மைப் பிரிந்த அவன் வராமலிருந்தால், நாம் இழப்பதற்கு நம் இனிய உயிரைத்தவிர வேறென்ன இருக்கிறது நம்மிடம்?நம்முடைய அழகும் நலனும் போன்ற எல்லாம் முன்னமே அவனுடன் சென்றுவிட்டனவே!" என்றாள்.

காக்கையின்மேல் நீர்த்திவலைகள் தெறித்து ஈரமாக்கியது போல, இவ்வூர் மக்கள் தலைவனைப் பழித்து அலர்தூற்றுவர்; ஈரமாகிய காக்கை கரையிலேயே தங்கியதுபோல் அவன் வருந்துணையும் நாம் ஆற்றியிருப்போம். ஆற்ற முடியவில்லையாயினும் நம்மிடம் உயிரைத் தவிர இழப்பதற்கு ஒன்றுமில்லையே! ஆகையால் உயிர் துறப்போம்; என்ற கருத்து இதில் மறைந்திருப்பதை உணரலாம். இதற்குரிய செய்யுள்:

"சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு
எறிதிரைத் திவலை ஈர்ம்புறம் நனைப்பப்
பனிபுலந்து உறையும் பல்பூங் கானல்
இருநீர்ச் சேர்ப்பன் நீப்பின் ஒருநம்

இன்னுயி ரல்லது பிறிதொன்று
எவனோ, தோழி! நாமிழப் பதுவே?" (குறு - 334)

இப்பாடலை இயற்றியவர் இளம்பூதனார் என்ற புலவர்.

[பெருந்தோடு - பெரிய அலகு;
ஈர்ம்புறம் - ஈரமான முதுகு;
பனிபுலந்து - குளிரை வெறுத்து;
நீப்பின் - பிரிந்தால்;
எவனோ - எதுவோ (எதுவுமில்லை என்பது கருத்து)]

Wednesday, July 22, 2009

8. நரகம் புகுக

ஒருவர் நாம் விரும்பியதைக் கொடுக்காவிட்டாலும், நமது செயலை மற்றவர் தடுத்தாலும், அவர்கள் மேல் நமக்கு வெறுப்பும் கோபமும் தோன்றுவது இயல்பு. ஆனால் இங்கு ஒரு பெண் மற்றவர்களையல்லாமல், தன் தாயையே நரகம் போகட்டும் என்று கூறுகிறாள். இதற்குரிய பின்னணியை இங்குக் காண்போம்.

களவுக்காலத்தில் தலைவன் இரவிலும் பகலிலும் மாறி மாறி வந்து தலைவியைக் கூடி மகிழ்வதுண்டு. ஒருமுறை இரவிலே தலைவியைக் காண வந்தான். முடியவில்லை. காரணம், தலைவியின் தோற்றத்திலும் செயல்களிலும் முன்பு போல் இல்லாமல் மாறுபாடு உண்டாயிருப்பதைக் கண்டாள் தாய். சந்தேகம் கொண்ட அவள் சில கட்டுப்பாடுகள் விதித்தாள்; வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுத்தாள்; மேலும் கண்காணிக்கத் தொடங்கினாள். இவ்வாறு சிறைப்படுத்தியதுபோலத் தலைவியை வீட்டிலேயே அடைத்து வைப்பது 'இற்செறிப்பு' எனப்படும்.

இவ்வாறு இற்செறிக்கப்பட்ட தலைவியின் நிலைபற்றித் தோழி தலைவனுக்கு, மற்றவர்கள் அறியாமல், மதிற்புறத்தின் வெளியே சென்று மறைமுகமாக யாரிடமோ பேசுவதுபோல் பேசி அறிவிப்பாள்; காவல் மிகுதியாயிருப்பதால், தலைவி வெளிவரமாட்டாள்; விரைவில் திருமணத்திற்குரிய செயல்களை மேற்கொள்க என்று கூறுவாள். இவ்வாறு அவள் கூறும்போது இங்கு ஒரு வரலாற்றுச் செய்தியையும் கூறுகிறாள்.

நன்னன் என்ற பெயருடைய ஒரு சிற்றரசன். அவன் வீரமுடையவனாயிருந்தும் ஒரு கொடுஞ்செயலைச் செய்தான். அவனது அரண்மனைத் தோட்டத்தில் ஒரு மாமரம் இருந்தது. அதிலிருந்து விழுந்த மாங்காய் ஒன்று அருகிலிருந்த ஆற்றில் மிதந்து சென்றது. அவ்வாற்றில் நீராடுவதற்காக வந்த ஒரு பெண் மிதந்து வந்த அக்காயை எடுத்துத் தின்றுவிட்டாள். காவலர் மூலமாக இதனை அறிந்த நன்னன் அப்பெண்ணுக்கு மரணதண்டனை விதித்து விட்டான். நீரில் மிதந்து சென்ற காயை எடுத்துத் தின்றதுதான் அவள் செய்த குற்றம்.

பெண்ணுக்கு மரணதண்டனை என்றறிந்ததும், அவள் தந்தை அரசனிடம் சென்று முறையிட்டான்; மன்றாடினான். அவளது குற்றத்திற்குப் பரிகாரமாக ஒன்பது பெரிய யானைகளைத் தருவதாகக் கூறினான்; ஒன்றுக்கு ஒன்பது மடங்காகத் தருவதாகவும் கூறினான்; அரசன் கேட்கவில்லை. தன் பெண்ணின் எடைக்கு எடை தங்கத்தால் செய்த, அவள்போன்ற பதுமையைத் தருவதாகக் கூறினான். இவ்வளவு கூறியும் அவ்வரசன் கேட்கவில்லை! தண்டனையை நிறைவேற்றி விட்டான். பெண்கொலை புரிந்த இப்பாவத்திற்காகப் புலவர்கள் யாவரும் அவனைப் பாடுவதைத் தவிர்த்தனர். முடிவில் அவன் நரகம் புக்கதாகவும் கூறப்படுகிறது.

இனி நாம் தலைப்பிற்குச் செல்வோம். தலைவன் தலைவியைப் பிரிந்து பல நாட்களுக்குப் பின், ஒருநாள் அவளைக் காணப்போகிறோமென்று மகிழ்ச்சியுடன் வந்தான். ஆனால், தாய் அவன் தலைவியைப் பார்க்க விடாமல் காவல் போட்டு அவளை வீட்டில் அடைத்து விட்டாள். அது மட்டுமல்லாமல், பகைவர்களால் சூழப்பட்ட ஊரில் வாழும் மக்கள் எப்படி இரவு முழுதும் உறங்காமல் விழிப்புடனிருந்து தமது ஊரைக் காப்பார்களோ அதுபோல், தாயும் உறக்கம் என்பதில்லாமல் தலைவியைக் காத்திருந்தாள். இவ்வாறு காவல் மிகுதியாயிருந்த செய்தியைச் சிறைப்புறமாகத் தலைவனுக்கு அறிவுறுத்திய தோழி, பெண்கொலை புரிந்த நன்னனைப்போல இத்தாயும் நீங்காத நரகத்திற்குச் செல்வாளாக என்று முடிக்கிறாள். இதற்குரிய செய்யுள் வருமாறு:

" மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றோடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்,
பெண்கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீ'இயரோ! அன்னை;
ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இவளே!" (குறு - 292)

[மண்ணிய - நீராட;
வரையா நிரையம் - நீங்காத நரகம்;
செலீ'இயர் - செல்வானாக]

இப்பாடலையும் இதில் ஒரு வரலாற்றுச் செய்தியையும் தந்தவர் பரணர் என்ற புலவர். அநேகமாக இவரது பாடல்களிலெல்லாம் ஏதாவதொரு வரலாற்றுச் செய்தி அமைந்திருக்கும். இந்நன்னனைப் பற்றிய செய்தி புறநானூற்றில் வேறுசில புலவர்களாலும் கூறப்பட்டுள்ளது.

Sunday, July 19, 2009

7. சூளுரை

அகப் பொருளில் தலைவன் தலைவியை அவளது உறவினர் முதலிய யாருமறியாமல் கூடி மகிழ்வது 'களவு' எனப்படும்; பின்னர் ஊர் அறியத் திருமணஞ் செய்துகொண்டு இல்லற வாழ்வை மேற்கொள்ளுதல் 'கற்பு' எனப்படும். களவுக் காலத்தில், தலைவன் தலைவியிடம் 'உன்னைப் பிரியேன்; பிரியின் தரியேன்' என்றும், 'விரைவில் வரைந்து(மணந்து) கொள்வேன்' என்றும் அன்பு மொழிகள் கூறித் தெய்வத்தின்மேல் சூளுரைப்பது (சபதம் செய்வது) உண்டு.

இவ்வாறு ஒரு தலைவன் சூளுரைத்தான். பின்னர் 'நம் திருமணத்திற்காகப் பொருள் சேர்த்து வருவேன்' என்று கூறிப் பிரிந்தான். அவனால் குறித்த காலத்தில் வரமுடியவில்லை. அதனால் ஏக்கம் ஒரு பக்கம்; தெய்வத்தின் மேல் சூளுரைத்திருக்கிறானே! இப்படி வராமலிருப்பதால் தெய்வக்குற்றமேற்பட்டு, அவனுக்கு ஏதெனும் தீங்கு நேருமோ? என்ற அச்சம் ஒரு பக்கம்; இவற்றால் உண்டாகிய மனவருத்தம் ஒரு பக்கம். எனவே உடல் மெலியத் தொடங்கினாள் தலைவி.

தலைவி இல்லத்தின் முன்புறத்தில் நல்ல வெண்மையான மணற்பரப்பு; அதன் ஒருபக்கத்தில் ஒரு புன்கமரம். அதில் அரும்புகளும் மலர்களும் நிறைந்து பூத்துக் குலுங்கியது. வெண்மணற்பரப்பில் அம்மரத்தில் பூக்கள் ஏராளமாக எல்லாப்பக்கமும் உதிர்ந்து பரவிக் கிடந்தன.

அக்காலத்தில் வீட்டு முன்புறத்தில் ஏதேனும் வேண்டுதலை முன்னிட்டு முருகனுக்குத் திறந்தவெளியில் பூசை போடுவார்கள்; அந்த இடம் முழுவதிலும் வெண்மையான நெற்பொரியை வாரி இறைத்திருப்பார்கள்; பாடியும், ஆடியும் வழிபடுவார்கள். இவ்வறு பூசை போடுதலை 'வெறியாட்டு எடுத்தல்' அல்லது 'வெறி அயர்தல்' என்பர். இப்படி வெறியாட்டு எடுத்த களம் போல விளங்கியது, தலைவி இல்லத்தின்முன் புன்கமலர்கள் உதிர்ந்து பரவிக் கிடந்த தோற்றம்! மேலும் ஆற்று வெள்ளத்தால் ஒதுக்கப்பட்ட எக்கர் மணல்போல அப்பூக்கள் ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன.

இத்தகைய இல்லத்தின் முன்புறத்தில்தான் தலைவன் தலைவியின் மெல்லிய நேரான முன்கையைப் பற்றிக்கொண்டு, தெய்வ மகளிரின்மேல் சூளுரைத்தான்.

தலைவன் இவ்வாறு சூளுரைத்திருந்ததையும், தலைவியின் வருத்தத்தையும் அறிந்தவள் தோழி. ஆகையால், தலைவன் வந்தவுடன் அவனுக்குப் பின் வருமாறு கூறினாள்:

"மகிழ்ச்சியோடிருக்கும் தலைவனே! தலைவியை வரைந்து கொண்டு எங்களுக்கும் மகிழ்ச்சியைத் தாராமலிருக்கிறாய்! எங்கள் வீட்டின் முன்புறத்திலிருக்கும் வெண்மணற்பரப்பில்தான் நீ தலைவியின் முன்கையைப் பற்றிக்கொண்டு சபதம் செய்தாய்! தெய்வ மகளிரின்மேல் 'நின்னைப் பிரியேன்' என்று கூறிய அந்தச்சூளுரை நீ வராமலிருந்ததால் எங்களுக்கு மிகவும் அச்சத்தையும் வருத்தத்தையும் தந்தது. இனியேனும் காலத்தை நீட்டிக்காமல் விரைவில் தலைவியை மணமுடிப்பாயாக!" என்றாள். இக்கருத்தை விளக்கும் செய்யுள்:

"எம் அணங் கினவே, மகிழ்ந! முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறி'அயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேர் இறை முன்கை பற்றிச்
சூர்'அர மகளிரோடு உற்ற சூளே!" (குறு - 53)

[அணங்கின - வருத்தம் உண்டாக்கின;
முன்றில் - வீட்டு முன்புறம்;
நனை - அரும்பு;
எக்கர் - ஆற்று வெள்ளம் ஒதுக்கிய மணல் மேடு;
சூர் - அச்சந்தரும்;
சூள் - சபதம்]

இச்செய்யுளை நமக்குத் தந்தவர் - கோப்பெருஞ்சோழன். பிசிராந்தையாரிடம் காணாமலே நட்புக் கொண்ட அதே சோழன்தான்.

Saturday, July 18, 2009

6.ஆடிப்பாவை

ஆடி என்பது கண்ணாடி; பாவை என்பது அக்கண்ணாடிக்குள் தோன்றும் பிம்பம் (அதாவது உருவம்). ஒருவன் முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு சிரித்தல், அழுதல், ஆடுதல் என்றிவ்வாறான சேட்டைகளில் எது செய்தாலும் அக்கண்ணாடிக்குள் தோன்றும் உருவமும் அவற்றையெல்லாம் செய்வதைக் காணலாம். இத்தகைய ஆடிப்பாவையை ஒரு தலைவனுக்கு உவமையாகக் கூறியுள்ளார், ஆலங்குடி வங்கனார் என்னும் புலவர். அது பற்றி இப்போது காணலாம்.

ஒரு தலைவனும் தலைவியும் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்தி வந்தனர். அவர்களது அன்பிற்கு அடையாளமாக ஒரு மகனும் பிறந்தான். அதன்பின் ஏதோ ஒரு காரணத்தால் அவர்களுடைய இல்லறத்தில் சிறு விரிசல் ஏற்பட்டது. அதன் விளைவாகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்று, ஒரு பரத்தையின் இல்லத்தில் தங்கினான். இதனையறிந்த தலைவி, அப்பரத்தையை இழிவாகப் பேசினாள். தன் கணவனை அவள்தான் தன்னிடமிருந்து பிரித்து வலிய இழுத்துச் சென்றுவிட்டாள் என்று பலரிடமும் கூறிவந்தாள்.

மற்றவர்கள்வாயிலாக அப்பரத்தையும் தலைவி கூறியவற்றைக் கேட்டறிந்தாள். அவள் சும்மா இருப்பாளா? தலைவியிடம் சென்று கூறவேண்டும் என்பதற்காகவே அவளுக்கு வேண்டியவர்கள் கேட்கும்படி அத்தலைவியையும் தலைவனையும் பற்றிப் பின்வருமாறு கூறினாள்:

"வயல்வெளிகளும் நீர்நிலைகளும் நிறைந்த ஊரைச் சேர்ந்தவன் தலைவன். அவ்வூரின் வயலோரமாக உள்ள தோட்டங்களில் மாமரங்கள் நிறைந்துள்ளன.அவற்றில் நன்றாக விளைந்து முற்றிய மாம்பழங்கள் பறிப்பாரின்றித் தானாகவே காற்றினால் உதிர்ந்தன. இனிமையான அப்பழங்களைப் பக்கத்து வயல்களில் மேய்ந்து கொண்டிருந்த பெரிய வாளை மீன்கள் கவ்விக்கொண்டு சென்று சுவைத்தன. இத்தகைய ஊரைச் சேர்ந்த தலைவன் எங்கள் வீட்டிலிருக்கும்போது, தன்னையும் தலைவியையும் பற்றிப் பலவாறாகப் பெருமை பேசுவான்.

"ஆனால், அவள் வீட்டில் நாள்தோறும் நடப்பது என்ன தெரியுமா? அங்கு தலைவன் அவள் விரும்பியபடியெல்லாம் ஆடுவான்! கண்ணாடி முன் நிற்கும் ஒருவன் கையும் காலும் தூக்கி ஆடினால், அதனுள் தோன்றும் உருவமும் அவ்வாறே கை கால்களைத்தூக்கி ஆடுமல்லவா? அதுபோலத்தான் அவனும் மனைவி சொன்னபடியெல்லாம் ஆடினான். இவ்வாறு அவனை ஆட்டிப் படைத்த அவள் என்னைப்பற்றி அவதூறாகப் பேசினாளே? அவனை ஒன்றும் நானே வலியச் சென்று இழுத்து வரவில்லை! அவனாக வந்தான்; நான் சேர்த்துக் கொண்டேன். அவ்வளவுதான். அவன் ஊரில் தானாக முற்றி உதிர்ந்த தோட்டத்து மாங்கனியை வயல்களில் உள்ள வாளைமீன்கள் கவ்விச் செல்வது போலத்தான் இதுவும்!" என்றாள்.

இதனை விளக்கும் குறுந்தொகைச் செய்யுள் இதோ:

"கழனி மாஅத்து விளைந்துகு தீங்கனி
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்மில் பெருமொழி கூறித் தம்மில்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்தன் புதல்வன் தாய்க்கே" (குறு - 6)

[மாஅத்து - மாமரத்தின்;
விளைந்துகு - விளைந்து உதிரும்;
பழனம் - வயல்;
கதூஉம் - கவ்விச் செல்லும்;
மேவன - விரும்பியன]

இச்செய்யுளில் தலைவியைக் குறிக்கும்போது பரத்தை தலைவி என்று கூறப்பிடிக்காமல் 'புதல்வன் தாய்' எனக் கூறுதல் நோக்கத்தக்கது.

Wednesday, July 15, 2009

5. இனிப்பும் உவர்ப்பும்

'பாட்டி சொல்லைத் தட்டாதே' என்பதொரு திரைப்படம். ஆம்! எங்கள் பாட்டி கூறிய ஒரு கிராமத்துக்கதையைத் தட்டாமல் இங்கு குறிப்பிடுகிறேன்.

ஒரு கணவன் மனைவி; புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள்; ஒருவர் மீதொருவர் அளவற்ற காதலுடையர்கள்; கணவன் ஒருநாள் சற்றுத் தாமதமாக வீடு வந்து சேர்ந்தான். வழக்கமாக அவனுக்கு உணவிடும் தாய், அன்று மருமகளை, அதாவது அவன் மனைவியை அழைத்து, 'நீயே அவனுக்கு உணவு பரிமாறு' என்றாள். அவளும் அதை எதிர்பார்த்தவள் போலச் சென்று ஆவலோடு பரிமாறினாள். கணவனும் அவள் முகத்தைப் பார்த்தவாறே, ஆவலோடு அவள் இட்டதை உண்டு தீர்த்தான்.

சற்று நேரம் சென்றபின், தாய் உள்ளே சென்று பார்த்தாள்; அவனுக்கு எடுத்து வைத்த உணவு அப்படியே இருந்ததைக் கண்டாள்; மருமகளிடம் "ஏன் இன்று அவன் உண்ணவில்லை?" எனக் கேட்டாள். அவளும் அங்கு வந்து பார்த்தபின்தான் அவளுக்குத் தன் தவறு புரிந்தது; ஏதோ மறதியாக மாட்டுக்கென ஊற வைத்த பருத்தி விதையும், பிண்ணாக்குநீரும் உணவுக்குப் பக்கத்தில் வைத்திருந்ததை எடுத்து, தான் பரிமாறியிருக்கிறொம் என்பது! கணவனும் ஏதும் கூறாமல், தன்மேலிருந்த காதலால் அதை உண்டு தீர்த்திருக்கிறான்; உணர்வும், சுவையும் தெரியாமல்! "இனியார் என் சொலினும் இன்சொல்லே; இன்னார் கனியும் மொழியும் கடுவே" என்ற குமரகுருபரர் வாக்கு, சொல்லுக்கு மட்டுமன்றிச் செயலுக்கும் பொருந்துமல்லவா!

இனி, இத்ற்கேற்ப ஒரு தலைவனுக்குத் தலைவி முதலில் இனியவளாக இருந்து பின்னர் இன்னாதவளாக மாறிய நிலையை 'மிளைக்கந்தனார்' என்ற புலவர் குறுந்தொகைச் செய்யுளில் (196) கூறியிருப்பதைக் காண்போம்.

பல நாட்கள் தலைவியிடம் பழகிய தலைவன், சில நாட்கள் அவளை மறந்திருந்து, பின்னர் காண வந்தபோது தோழி அவனிடம் கூறுகிறாள்: "ஐயனே! முன்னெல்லாம் என் தோழியாகிய தலைவி பச்சை வேப்பங்காயைத் தந்தால்கூட, 'இனிய வெல்லக்கட்டி' என்று அதனை ஏற்றுக் கொண்டீர்கள்! ஆனால் இப்பொழுதோ?

"பாரி வள்ளலின் பறம்புமலையில் ஏராளமான சுனைகள் உள்ளன. அவற்றின் நீர் எப்பொழுதும் குளிர்ச்சியாகவும், தெளிவாகவும் இருக்கும். பனி மிகுந்த குளிர்காலமாகிய தை மாதத்தில் அதன் குளிர்ச்சிக்குக் கேட்கவே வேண்டாம்! அத்தகைய சுனைநீரை அதன் குளிர்ச்சி மாறாமல் கொடுத்தாலும், 'அது வெப்பமாயிருக்கிறது; உவர்ப்பாயிருக்கிறது' என்று கூறுகிறீர்கள். உங்கள் அன்பின் பகுதி இப்படி வேறுபட்டிருப்பது ஏன்? தலைவியிடம் அன்பு குறைபட்டதனாலா?" என்று கூறினாள்.

இக்கருத்தமைந்த பாடலை இனிக் காண்போம்:

"வேம்பின் பைங்காய் என்தோழி தரினே
தேம்பூங் கட்டி என்றனிர்; இனியே,
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தை'இத் திங்கள் தண்ணிய தரினும்
'வெய்ய; உவர்க்கும்' என்றனிர்;
ஐய! அற்றால் அன்பின் பாலே"
(குறுந் - 196)

[பைங்காய் - பச்சை மாறாத காய்;
தேம்பூங்கட்டி - இனிய மென்மையான வெல்லக்கட்டி;
தெண்ணீர் - தெளிந்த நீர்;
வெய்ய - வெப்பமுடையன]

Monday, July 13, 2009

4. நறியவும் உளவோ?

திருமாலின் கையிலிருக்கும் ஆழிவெண்சங்கை நோக்கிக் "கருப்பூரம் நாறுமோ, கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?" என்றெல்லாம் ஆண்டாள் நாச்சியார் கேட்டதாக ஒரு செய்யுள் உண்டு. அதுபோலவே ஒரு தலைவன் வண்டை நோக்கி, "நறியவும் உளவோ, நீயறியும் பூவே?" எனக் கேட்டதாகக் குறுந்தொகையில் இறையனார் பாடிய ஒரு செய்யுள் உண்டு. அதனை இப்பொழுது காண்போம்.

ஒரு தலைவன் தலைவியைக் காணவந்து அவளை நெருங்கினான். அவளோ நாணத்தாலும் அச்சத்தாலும் விலகி நின்றாள். அப்பொழுது அவளைச் சுற்றி ஒரு வண்டு ரீங்காரமிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, அதனை விரட்டுவதுபோல அவளை அணுகினான். இவ்வாறு வண்டை விரட்டிக்கொண்டே தலைவியை நெருங்கித் தொடுதலை 'வண்டோச்சி மருங்கணைதல்' என்ற துறையாகக் கூறுவர். வண்டை நோக்கிக் கூறுவதுபோல இங்கு தலைவன் தலைவியின் பெருமையைக் கூறுகிறான்.

"வண்டே! நீ அழகான சிறகுகளைக் கொண்டிருக்கிறாய். நாள்தோறும் பூக்கள்தோறும் சென்று தேன் நுகர்வதையே உன் தொழிலாகக் கொண்டிருக்கிறாய். உன்னை ஒன்று கேட்கிறேன். நான் உன்னைப் புகழ்கிறேன் என்பதற்காக என்மேல் விருப்பம் கொள்ளாமல், நீ உண்மையாகக் கண்டு அறிந்ததைச் சொல்!

"இதோ நிற்கிறாளே இந்தப்பெண்! இவள், நான் தன்னோடு பழகியதை மறக்காமல் என்னிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருக்கிறாள்; மயில் போன்ற அழகும் மென்மையும் கொண்டவள்; முத்துப் போன்ற நெருக்கமாக அமைந்த பற்களை உடையவள்; இவளது கூந்தலில் தோன்றும் நறுமணத்தைப்பார்! நீ தேனெடுப்பதற்காகச் சென்று பார்த்த, உனக்குத் தெரிந்த பூக்களில் இவள் கூந்தலைவிட மிகுந்த மணமுடைய பூக்கள் உண்டோ? எனக்காகவல்லாமல், நீயறிந்த உண்மையைச் சொல்!" என்று கூறுகிறான்.

திருவிளையாடற்புராணமும் தருமிக்குப் பொற்கிழியளித்த படலத்தில் பாண்டியன் தனக்கு உண்டான ஐயத்தைப் போக்குபவர்க்காகப் பரிசு அறிவித்தது; தருமி என்பவன் அதனைப் பெற முயன்றது; அவன் கொடுத்த பாடலில் பொருட்குற்றமுண்டென்று நக்கீரர் வாதாடியது முதலியனவாக விரித்துக் கூறியுள்ளது. 'திருவிளையாடல்' என்ற திரைப்படத்திலும் இந்நிகழ்ச்சிகளை நேயர்கள் பர்த்திருக்கலாம். கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை என்பதே நக்கீரர் கண்ட குற்றமாகும். இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக அமைந்த குறுந்தொகைச் செய்யுள் வருமாறு:

"கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ!
பயிலியது கெழீ'இய நட்பின் மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீயறியும் பூவே?" (குறுந் - 2)

[கொங்கு - தேன்;
சிறை - சிறகு;
செறியெயிறு - நெருங்கிய பற்கள்;
அரிவை - பெண்;
நறிய - நறுமணமுடையவை]

Saturday, July 11, 2009

3. மோர்க்குழம்பும் முகமலர்ச்சியும்

குறுந்தொகையிலிருந்து "கூடலூர்கிழார்" என்ற புலவர் பாடிய மற்றொரு காட்சி. ஒரு தாய் தன் மகளைச் செல்லமாக வளர்க்கிறாள். சமையல் செய்யவோ வீட்டு வேலைகளைச் செய்யவோ விடுவதில்லை. இப்படியே வளர்ந்த பெண்ணுக்கு வயது வந்ததும் திருமணம் முடித்தாள். இவள் கணவன் வீடு சென்றால் எப்படிக் குடும்பம் நடத்துவாளோ, என்ன செய்வாளோ என்ற கவலை உண்டாயிற்று அந்தத் தாய்க்கு. எப்படியும் ஒரு நாள் போய்த்தானே ஆக வேண்டும்! அனுப்பி வைத்தாள்; அவளும் போனாள். இங்கே தாய்க்குக் கவலையும் பெரிதாயிற்று. மகள் நினைவாகவே இருந்த அவள் ஒரு நாள் தனது தோழியும், மகளின் வளர்ப்புத் தாயுமாகிய செவிலியை அழைத்தாள். மகளின் வீடு சென்று, அங்கே அவள் என்ன செய்கிறாள்? எப்படிக் குடும்பம் நடத்துகிறாள்? ஒன்றும் தெரியாமல் விழிக்கிறாளா? துன்பப்படுகிறாளா? என்றெல்லாம் பார்த்து வருமாறு அனுப்புகிறாள். அதன்படி அங்கு சென்ற அவள் கண்ட காட்சி:

மகள் சமையல் செய்து கொண்டிருக்கிறாள். கணவன் வருவதற்குள் முடிக்க வேண்டுமே என்று அவசர அவசரமாகச் செய்கிறாள். கணவனுக்குப் பிடித்த மோர்க்குழம்பு வைக்க எண்ணுகிறாள்.

கட்டித் தயிரை எடுத்து, மத்தினால் கடையாமல் தன் கையாலேயே பிசைந்து மோர் ஆக்குகிறாள். காந்தள்மலர் போன்ற அந்தக் கையைத் தண்ணீரில் கழுவாமல், தன் உடையிலேயே துடைத்துக்கொள்கிறாள். அத்துணை அவசரம் அவளுக்கு! மோர் கொதித்தபின் தாளிக்கிறாள். எண்ணெயில் கடுகு வெடித்ததும், இறக்கிவைத்திருந்த மோரில் கொட்டிக் கலக்குகிறாள். 'குய்' என்ற ஓசையுடன் தாளிப்பின் மணங்கலந்த புகை அவளது குவளை போன்ற மைதீட்டிய கண்களில் படுகின்றது. இவள் சமையல் முடிக்கவும் கணவன் வரவும் சரியாயிருந்தது.

அவன் உண்ணத் தயாராய் வந்ததும், தன் கையாலேயே அவனுக்கு உணவு பரிமாறுகின்றாள். அவனும் ருசித்துச் சாப்பிடுகின்றான். மோர்க்குழம்பு நன்றாக உள்ளதென்று பாராட்டவும் செய்தான். அவள் தன் கையாலேயே துழாவிச் சமைத்த மோர்க்குழம்பைக் கணவன் விரும்பிச்சுவைத்து உண்டதோடல்லாமல், பாராட்டவும் செய்ததைக் கேட்டு, அவள் முகம் ஒளிபொருந்திய ஒரு மெல்லிய புன்னகையுடன் மலர்ந்த்தது.

இக்காட்சிகளையெல்லாம் கண்ட செவிலித்தாய், ஊர்திரும்பியதும் நற்றாயிடம் அவள் மகள் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்துகின்ற பாங்கை விவரிக்கிறாள். அந்தச் செய்யுள் இதோ:

"முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீ'இக்
குவளை உண்கண் குய்புகை கமழத்
தான்'துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!"
(குறு - 167)

[முளிதயிர் - முற்றிய கட்டித்தயிர்;
கலிங்கம் - ஆடை;
உண்கண் - மைதீட்டிய கண்;
அட்ட - சமைத்த;
தீம்புளிப்பாகர் - இனிய புளிப்பை உடைய குழம்பு;
ஒண்ணுதல் - ஒளிபொருந்திய நெற்றியுடையவள்]

செவிலி கூறிய இச்செய்தியைக் கேட்டதும், அந்தத் தாயும் பெரிதும் மகிழ்ந்திருப்பாள் என்பதைக் கூறவும் வேண்டுமோ!

Saturday, July 4, 2009

2. சிவப்பும், மறுப்பும்

இப்பொழுது திப்புத்தோளார் என்ற புலவர் பாடிய செய்யுள் ஒன்றைக் காண்போம். இப்புலவர் பெயர் தீப்புத்தேளார் என்றும் சில பிரதிகளில் காணப்படுகிறது. தீப்புத்தேள் என்பது அக்கினி தேவனைக் குறிக்கும். இக்காலத்திலும் சிலர் தம் குழந்தைகளுக்கு அக்கினீசுவரன், அக்கினீஷ் என்று பெயரிடுவதைக் காண்கிறோம்.

நாம் ஒருவரைக் காணச் செல்லும்போது, வெறுங்கையுடன் செல்வதில்லை. ஏதேனும் பரிசுப்பொருளோ, பழம் அல்லது தின்பண்டங்களோ வாங்கிச்செல்வது வழக்கமல்லவா? அதுபோல் அக்காலத்தில் தலைவன் தலைவியைக் காணச் செல்லும்போது மலர் அல்லது தழையைக் கையுறையாகக் கொண்டு செல்வது வழக்கம். அதைத் தோழி மூலம் தலைவியிடம் சேர்த்து அவளைக் காண்பான். இதற்குக் 'கையுறையளித்தல்' என்று பெயர். தோழி அதனை ஏற்கவும் செய்யலாம், மறுக்கவும் செய்யலாம். அவ்வாறு ஒரு தோழி தலைவன் தந்த கையுறையை மறுத்த செய்தியே திப்புத்தோளாரது இச்செய்யுளில் கூறப்படுகிறது.

முருகப் பெருமான் சூரன் முதலிய அரக்கர்களைக் கொன்று அழித்த வரலாறு யாவரும் அறிந்ததே. அவ்வாறு அவன் அழித்த போர்க்களம் முழுதும் இரத்தவெள்ளத்தால் செந்நிறக்களமாகியது. அம்முருகன் கையிலிருந்த அம்பும் அரக்கர் உடலைத் துளைத்து ஊடுறுவியதால் செந்நிறத் தோற்றம் பெற்றது. அது மட்டுமா! அம்முருகன் ஊர்ந்து வந்த யானையும் கொம்புகளால் (தந்தங்களால்) பகைவனைக் குத்திக் கொன்றதால், அதன் தந்தங்களும் குருதி படிந்து விளங்கின. ஏன்? அம்முருகனேகூடச் செந்நிற வாய்ந்த தோற்றங்கொண்டவன் என்பதால்தானே 'சேயோன்' என்றழைக்கப்படுகிறான்! அம்முருகன் வாழும் மலையும் செங்காந்தள் மலர்கள் நிறைந்திருப்பதால், குருதி படிந்தது போல் தோன்றுகின்றது.

இத்தகைய மலையில் வாழும் தலைவியைக் காணத்தான் தலைவன் வந்தான். அவன் கையுறயாக ஒரு செங்காந்தள் மலர் கொண்டு வந்து தோழியிடம் தந்தான். அவளோ அதனை ஏற்றுக் கொள்ளாமல் பின்வருமாறு மறுத்துக் கூறினாள்:

"அரக்கர்களைக் கொன்று போர்க்களத்தையே செங்களமாக்கிய முருகன் வாழும் குன்று இது. அவன் கையிலிருப்பதும் செங்கோலம்பு. அவன் ஊர்தியும் செங்கோட்டு யானை. ஏன்? அவனே சேயோன் தானே! இவ்வாறு எங்கும் செந்நிறமாக விளங்கும் மலையில் வாழும் எங்களுக்கு நீ செங்காந்தள்மலரைத் தருகிறாயே! எங்கள் ம்லையெங்கும் செங்காந்தள் மலர்கள் குலைகுலையாகப் பூத்திருப்பதைப் பார்" என்று கூறிக் கையுறை மறுத்தாள்.

இதனை விளக்கும் செய்யுள் இதோ:

"செங்களம் படக்கொன்று அவுணர்த்
தேய்த்தசெங்கோல் அம்பின் செங்கோட்டு
யானைக்கழல்தொடிச் சேஎய்
குன்றம்குருதிப் பூவின் குலைக்காந் தட்டே"

[அவுணர் - அரக்கர்;
செங்கொடு - தந்தம்;
கழல்தொடி - முருகன் காலிலும் கையிலும் அணிந்திருந்த அணிகள்;
காந்தட்டே - காந்தள் பூக்களை உடையது]

தீப்புத்தேளார் (புத்தேள் - தேவர்) தம் பெயருக்கேற்ப செய்யுள் முழுதும் அச்சந்தரும் செம்மை நிறந் தோன்றக் கூறியிருப்பதைக் காணலாம்.

1. கலப்பு

முதலாவதாக, குறுந்தொகைச் செய்யுள் (40) ஒன்றைக் காண்போம்:

தலைமகன் ஒருவன் பூஞ்சோலையுள் தலைவியைக் கண்டான். காதலர்கள் சந்திக்கின்ற இடம் பெரும்பாலும் இதுபோன்ற பொது இடங்கள்தானே! ஆனால், இங்கு குறிப்பிடும் காதலர்கள் இதற்கு முன் ஒருபோதும் ஒருவரையொருவர் பார்த்ததில்லை. எனினும் அவளைக் கண்டவுடன் தலைவனது மனம் அவள்பின் சென்றது. மனம் சென்றபின், அவர்கள் கண்ணும் கண்ணும் கலந்தன. கண்ணொடு கண்ணிணை நோக்கு ஒத்தன! அதன்பின் வாய்ச்சொற்கள் பயனில்லை என்றார் வள்ளுவர். ஆயினும், எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கொண்டே இருக்க முடியும்? மெல்ல மெல்லப் பேசத் தொடங்கினர். அவரவர் பெற்றோர்களைப் பற்றியும் குடும்ப நிலை பற்றியும் பரிமாறிக் கொண்டனர்.

நேரம் சென்றது; தலைவன் மெதுவாகப் பிரிந்து செல்லத் தொடங்கினான். அவன் சென்றால், மீண்டும் வருவானா, மாட்டானா? மறுபடி சந்திக்க முடியுமா? என்ற அச்சம் அவளிடம் உண்டாயிற்று. குறிப்பினால் இதனையுணர்ந்த தலைவன் பேசத் தொடங்கினான்:

"பெண்ணே! என் தாய் யாரோ? உன் தாய் யாரோ? நம்மிருவரின் தந்தைமார்களும் அவ்வாறே! எவ்வகையாலும் தொடர்புடையவர்கள் இல்லை. அது மட்டுமா? நீயும் நானும்தான் எங்கே எப்பொழுது பார்த்திருக்கிறொம்? இதுதானே நம் முதல் சந்திப்பு? ஆனாலும் பார்; உயர்ந்த வானத்திலிருந்து மழை பொழிகிறது. அது பொழியும்போது தூய பளிங்கு போல் நிறமற்றுத்தானிருக்கிறது. இந்தச் செம்மண் தரையில் துளிகள் விழுந்தவுடன், அம்மழைநீரும் செந்நிறமடைந்து விடுகிறதே! நீரின் நிறமும் நிலத்தின் நிறமும் ஒன்றாகி விடுகின்றன! அவை வெவ்வேறிடத்திருந்து வந்து சேர்ந்தபின் ஒன்றாகிவிட்டது போலத்தான் நாமும்! வேறு வேறிடத்திற் பிறந்து வளர்ந்தோம்; இன்று நம்மிடையே உள்ள இந்த அன்பினால், நமது நெஞ்சங்களுமொன்றாகிவிட்டன! எனவே எதற்கும் கவலைப்படாதே" என்றான்.

இனி, பாடலைக் காண்போம்:

"யாயும் ஞாயும் யாரா கியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயனீர்
போலஅன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே"

[ஞாய் - உன் தாய்; நுந்தை - உன் தந்தை; கேளிர் - உறவுமுறையினர்]

இவ்வினிய பாடலை இயற்றிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. ஆனால் இப்பாடலைத் தொகுத்த புலவர், 'செம்புலப்பெயல்நீர்போல' என இதில் வரும் உவமை சிறந்த கருத்து மிக்கதாக இருப்பதால், அதனையே "செம்புலப்பெயனீரார்" என இப்பாடலாசிரியர் பெயராகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இலக்கிய இன்பம் (சு. இராசகோபாலன்)

இன்று தமிழுக்குச் செம்மொழி என்ற அந்தஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. சென்ற நூற்றாண்டிலேயே டாக்டர்.கால்டுவெல் பாதிரியார் இதனைத் திட்டவட்டமாக ஆராய்ந்து நிறுவியுள்ளார். பழமை, சொல்வளம், திருந்திய பண்பட்ட இலக்கிய இலக்கணங்கள், பிற மொழிகளின் துணை வேண்டாத தனித் தன்மை முதலியன செம்மொழியின் பண்புகளாம். தமிழின் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. அவற்றையடுத்துத் தோன்றியவை சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம் போன்றவை. தொல்காப்பிய இலக்கணம் இவற்றிற்கெல்லாம் பல நூற்றாண்டுகள் முந்தியதென்பர். அதற்கு முன்னும் பல இலக்கியங்கள் இருந்ததால்தான் இந்த இலக்கணம் தொன்றியிருக்க வேண்டும். கால வெள்ளத்தாலும், இயற்கைச் சீற்றத்தாலும் அழிந்தன போக எஞ்சியவையே இன்றைய இலக்கியங்கள்.

மனிதன் வாழ்க்கைப் பயனாக அடையத்தக்க பேறுகள் அறம், பொருள், இன்பம், வீடு, என்பன. இவற்றுள் வீடு இப்பிறவியொழிந்தபின் பெறத்தக்கது. மற்றவற்றில் இன்பம் என்பது மனத்தால் உணர முடியுமேயன்றிப் பிறர்க்கு எடுத்துரைக்க முடியதது. எனவே அது 'அகம்' எனப்பட்டது. மற்றவை 'புறம்' எனப்பட்டன. இவ்விரு பொருள்களையும் பெற்று வாழும் வாழ்க்கை முறையைக் கூறுவதே தொல்காப்பியத்தின் பொருளதிகாரம். இவ்வாறு பகுத்துக் கூறும் வாழ்க்கை முறை பற்றிய இலக்கணம் பிற மொழிகளில் இல்லை, தமிழுக்கேயுரிய சிறப்பு.

இனி பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. சங்க காலத்தில் வழங்கிய அப்பாடல்களை யாரோ தொகுத்துள்ளனர். பத்துப்பாட்டு - பத்து தனித்தனிப் பாடல்கள், நூற்றுக்குமேற்பட்ட அடிகளையுடையவை; எட்டுத்தொகை - தனித்தனியான நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்ட எட்டு நூல்கள் ; நான்கு முதல் நாற்பது, ஐம்பது அடிகள் வரை உடையவை. இவற்றில் அகப்பொருள் பற்றிய பாடல்களே அதிகம். அகப்பொருட் பாடல்களுக்கென்று சில தனிப்பட்ட இயல்புகள் உண்டு:

(1) இவற்றில் வரும் மக்கள் இயற்பெயர்களால் கூறப்படுவதில்லை ; வெற்பன், ஊரன், தோழி, பாங்கன், நற்றாய் முதலிய பெயர்களால் தான் கூறப்படுவர். இக்காலத்திலும், "கதைகளில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல; கற்பனையே" என்று இதழ்களின் ஆசரியிர்கள் குறிப்பிடுவதைக் காணலாம்.

(2) பாடல்களுக்குத் திணை, துறை முதலிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அவை அப்பாடலின் பொருளை அறிய ஓரளவு உதவும்.

(3) பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாக்களே. ப்தினெண்கீழ்க்கணக்கு போன்ர்றவை வெண்பாக்களானவை.

(4) சில புலவர்கள் தம் பாடலில் குறிப்பிடும் சில நிகழ்ச்சிகள், உவமைகள் போன்றவை அக்கால வரலாற்றை அறிய உதவுகின்றன.

(5) சங்க நூல்களில் கற்பனைகள் உண்டு. ஆனால் அவை வரம்பு மீறிய உயர்வு நவிற்சிகளாக மாறுவதில்லை.

இனி, ஒரு சில சங்கச் செய்யுட்களின் இன்பத்தை நுகர்வோம்.