Sunday, August 16, 2009

14. "இன்னும் பாடுக"

நாம் எண்ணியது நிறைவேறுமா எனவும், துன்பங்கள் உண்டாகும்போது அவை எப்போது நீங்கும் எனவும் அறிவதற்காகக் குறி கேட்டல், சோழியிட்டுப் பார்த்தல் முதலியவற்றை இக்காலத்திலும் சிலர் மேற்கொள்கின்றனர். அதுபோல அக்காலத்திலும் முறத்தில் நெல், அரிசி முதலியன இட்டும், சோழிகளின் எண்ணிக்கை கொண்டும் குறி கூறுதல் உண்டு. இதனைக் 'கட்டுக் காணுதல்' என்பர். இவ்வாறு பார்த்துக் குறி சொல்வோரைக் 'கட்டுவிச்சி' என்பர். குறிசொல்லும்போது தெய்வங்களை அழைத்து அவள் பாடுதலால் 'அகவன் மகள்' என்றும் அவர்களைக் கூறுவர்.

தலைவனைப் பிரிந்த வருத்தத்தால் தலைவி உண்ணாமலும், உறங்காமலும், தோழிகளோடு விளையாடாமலும், யாவருடனும் பேசிச் சிரித்து மகிழாமலும் இருப்பாள். இவளது நிலை கண்ட தாய், இது தெய்வக்குற்றத்தால் ஏற்பட்டதோ, ஏதேனும் நோயினால் உண்டானதா எனக் கவலை கொள்வாள். அப்பொழுது கட்டுவிச்சியை அழைத்து உண்மையைக் கண்டுகூறும்படி கேட்பாள். இதுபோன்ற சமயங்களில் வெறியாட்டயர்தலும் உண்டு. அதுபற்றி முன்னமே பார்த்துள்ளோம்.

இப்பொழுது ஒரு தலைவியின் நோய்க்கான காரணத்தை அறிய அவள்தாய் கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்டாள். அவளும் வந்து தெய்வங்களை அழைத்துப் பாடத் தொடங்கினாள். அவள் பாடிய பாட்டினிடையே தலைவனுடைய மலையின் பெயரும் வந்தது. அதனைக் கேட்ட தோழி, "தெய்வங்களை அழைத்துப் பாடும் அம்மையே! சங்குமணிகளைக் கோத்தது போலச் சுருண்ட கூந்தலை உடையவளே! இப்பொழுது நீ பாடிய அந்தப் பாடலை - தலைவனது நெடிய குன்றத்தைப் பற்றிய அந்தப் பாடலை - இன்னும் பாடுக; இதைக்கேட்டே எங்கள் தலைவியின் நோய் நீங்குமாதலால், அந்தப் பாட்டை இன்னும் பாடுக!" என்று கூறினாள். இவ்வாறு கூறுவதால், தலைவியின் நோய்க்குக் கடவுட்குற்றம் காரணமன்று; தலைவனைப் பிரிந்தமையே காரணம் என்பதைக் குறிப்பாகத் தோழி செவிலிக்கு உணர்த்தினாள். இவ்வாறு உண்மை உணர்த்துவது 'அறத்தொடுநிலை' எனப்படும். இங்கு தோழி செவிலிக்கு உணர்த்தியதுபோலத் தலைவியே தோழிக்கு உணர்த்தலும், செவிலி ந்ற்றாய்க்கு உணர்த்தலும், நற்றாய் தந்தை தன்னையர்க்கு உணர்த்தலும் 'அறத்தொடுநிலை' எனப்படும்.

தோழியின் சொற்கேட்ட செவிலி, தலைவனைப் பற்றி அறிந்து, அவனுடன் தலைவியைச் சேர்த்துவைக்கும் மண ஏற்பாடுகளைத் தொடங்குவாள் என்பது கூற வேண்டியதில்லை.

"அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே;
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" [குறு - 23]

இப்பாடலியற்றிய புலவர் ஔவையார்.

[அகவல் - அழைத்தல்;
மனவுக்கோப்பு - சங்குமணிகளைக் கோத்த மாலை; (அது சுருண்ட வெண்மையான கூந்தலுக்கு உவமை)]

Saturday, August 15, 2009

13. ஊமன் காத்த வெண்ணெய்

அகப்பொருளில் களவிலும் சரி; கற்பிலும் சரி, தலைவியைவிடத் தோழிக்குத்தான் முக்கிய பங்கு. தலைவியின் வருத்தத்தைக் கண்டு ஆறுதல் கூறவும், தலைவனுடன் பேசவும், அவர்கள் ஒன்று சேர ஆவன செய்யவும், வீட்டாரிடம் தலைவியின் நிலையை எடுத்துக்கூறித் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவும், இதுபோன்ற இன்னும் பல செயல்களுக்கும் தோழியின் பங்கு இன்றியமையாதது; அளவிட முடியாதது. இதே போலத் தலைவனுடைய தோழனான பாங்கனுக்கும், தோழியைப்போல அவ்வளவு இல்லாவிட்டாலும், ஓரளவு பங்கு உண்டு. தலைவன் தவறு செய்யும்போது நல்வழிப்படுத்த இடித்துக் கூறவும், அவன் இவனிடம் தன் துயரை வெளிப்படுத்தி ஆறுதல் பெறவும் பாங்கனது துணை தேவைப்படுகிறது.

இப்பொழுது இடித்துக்கூறிய பாங்கனுக்குத் தலைவன் தன் இயலாமையைக் கூறி வருந்தும் ஒரு செய்யுளைக் காண்போம்.

பிரிவுத்துயரத்தால் தலைவி வருந்துவதைப் போலவே, ஒரு தலைவனும் தன் தலைவியைப் பிரிந்து சென்றபின் பெரிதும் வருந்தினான். அவனது துன்பத்தைக் கண்ட பாங்கன், அதற்குக் காரணத்தைக் கேட்டறிந்தான். "ஒரு பெண்ணுக்காக நீ இவ்வாறு வருந்தல் கூடாது. உனது ஆற்றல், தலைமை, தகுதி முதலியவற்றுக்கு நீ இவ்வாறு ஒழுகுதல் தகாது. எனவே, அவளை மறந்துவிட்டு, உன் செயல்களில் கருத்தைச் செலுத்துவதே உன் நற்பண்புக்கு ஏற்றது." எனக் கூறி இடித்து உரைத்தான்.

இதனைக் கேட்ட தலைவன், "என்னை இடித்துக் கூறித் திருத்த முயலும் நண்பனே! நீ கூறியபடி நான் செய்யவில்லை என்பதுதானே உன் மனக்குறை! அப்படிச் செய்யவேண்டும் என்பதுதான் என் விருப்பமும்! ஆனால், அது முடியவில்லையே! கதிரவன் வெயில் நன்றாகக் காய்கின்ற ஒரு பாறை. அதன்மேல் ஓர் இலையில் வெண்ணெய் வைக்கப் பட்டிருக்கிறது. அந்தப் பாறையின் பக்கத்தில் வெண்ணெய்ய்க்குக் காவலாக ஒருவன் அமர்ந்திருக்கிறான். அவன் எத்தகையவன் என்று நினைக்கிறாய்? அவனுக்குக் கைகளும் இல்லை; ஊமையாதலால் வாயும் பேச முடியாது! தன் கண்களால் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க முடியும்! வெயில் ஏற ஏறப் பாறையின் சூடு அதிகமாகியது; அதன் மேலிருந்த வெண்ணெயும் உருகி ஓடி வழியத் தொடங்கியது! இந்நிலையில் அதைக் காவல் காப்பவன் என்ன பாடு ப்டுவான் என்பதை எண்ணிப் பார்! அவனால் வெண்ணெய் ஓடுவதைப் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடியுமே தவிர, அதனை எடுத்து வேறிடத்தில் வைக்கவோ, யாரையேனும் கூவியழைத்துச் சொல்லவோ முடியுமா? அவன் நிலையில்தான் நானும் இருக்கிறேன்! என் துயரைச் சொல்லவும் முடியாமல், செயல்படவும் முடியாமல் தவிக்கிறேன்! 'நீங்கினால் சுட்டெரிக்கவும், நெருங்கினால் தணியவும் வல்ல தீப் போன்றது காம நோய்' என்று வள்ளுவர் கூறியுள்ள்து போல், என்னிடமும் அந்நோய் பரவியுள்ளது. என்னால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை! நான் என்ன செய்வேன்?" என்று பாங்கனுக்குத் தன் இயலாமையை எடுத்துக் கூறினான்.

இச்செய்யுளைப் பாடியவர் வெள்ளிவீதியார் என்ற பெண்பாற்புலவர்.

"இடிக்கும் கேளிர்! நும்குறை யாக
நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;
ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்
கையில் ஊமன் கண்ணிற் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற் கரிதே!" (குறு - 58)

[இடிக்கும் கேளிர் - கடிந்து சொல்லும் நண்பன்;
வெவ்வறை - வெப்ப மிகுந்த பாறை;
உணங்கல் - உருகுதல்;
பரந்தன்று - பரவியது;
நோன்றுகொளல் - பொறுத்துக் கொள்ளல்]

இச்செய்யுளின் இரண்டாமடியிறுதியில் மன், தில்ல என இரு இடைச்சொற்கள் உள்ளன. இவற்றில் 'மன்' என்பது 'அது முடியவில்லையே' என்ற கழிவிரக்கப் பொருளையும், 'தில்ல' என்பது 'நீ கூறியவாறு செய்யத்தான் நானும் விரும்புகிறேன்' என்ற விருப்பத்தையும் உணர்த்துகின்றன.

Thursday, August 6, 2009

12. குருகு சாட்சி

உலகில் திருட்டுக் குற்றம், கொலைக்குற்றம் முதலிய எந்தக் குற்ற வழக்காயிருந்தாலும், நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது, நேரில் பார்த்த சாட்சியங்கள் அல்லது தடயங்கள் அவசியம். இவற்றில் எதுவும் இல்லையானால் குற்றங்களை உறுதிப்படுத்துவது அரிதாகிவிடும்.

இங்கு ஒரு தலைவி தலைவனிடம் தன் நெஞ்சத்தைப் பறிகொடுத்தாள்; விரைந்து வந்து வரைந்து கொள்வேன் என்று கூறிச் சென்ற அவன் திரும்ப வந்தானில்லை. தலைவியின் வாட்டம் அதிகமாயிற்று. தன் தோழியிடம் அவனைக் கள்வன் என்று குற்றஞ் சாட்டுகிறாள். அக்குற்றத்தை வலியுறுத்த அவளிடம் சாட்சியங்கள் இல்லை; இதுகுறித்துத் தோழியிடம் தன் கவலையைப் பகிர்ந்துகொள்கிறாள். "தோழி! தலைவனும் நானும் பழகியதைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை; அவனே களவொழுக்கத்தால் திருட்டுத்தனமாக வந்த கள்வன்தானே! என் நெஞ்சத்தையும் நலனையும் கவர்ந்து சென்ற கள்வன், இதனை மறுத்து 'இல்லை' எனக் கூறினால் நான் என்ன செய்வேன்?"

இவ்வாறு சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவளுக்கு மின்னல் போல ஒரு நினைவு தோன்றிற்று. ஆம்! அவர்கள் இருவரும் மகிழ்ந்திருந்த வேளையில், அங்கே சற்றுத்தொலைவிலிருந்த ஒரு நீரோடையில் ஒரு குருகு (நாரை) நின்று கொண்டிருந்தது! தினைக்கதிர்கள் முற்றியபின் அறுவடைசெய்த இடத்தில் அவற்றின் அடித்தாள்கள் இருக்குமல்லவா! அத்தாள்களை (அடிப்பகுதி)ப் போன்ற சிறிய பசுமையான கால்களை உடையது அக்குருகு. இதுபோன்ற பல குருகுகள் அங்கு இருந்தன. அவைகள் அங்கே கூடியிருந்த தலைவனையும் தலைவியையுமா பார்த்துக் கொண்டிருந்தன? ஓடிக் கொண்டிருந்த அந்நீரோடையில் தங்களுக்கேற்ற உணவான ஆரல்மீன்கள் எப்போது வரும் என்றல்லவா எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தன!

"தங்கள் உணவை எதிர்நோக்கி அதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த அந்நாரைகள் எங்களைப் பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்! ஆனால் எங்களைத் தவிர அவைதான் அங்கிருந்தன" என்று தோழியிடம் சொல்லித் துயருற்றாள் தலைவி.

இனி இப்பாடலைப் பார்ப்போம்:

"யாரும் இல்லை; தானே கள்வன்;
தான்'அது பொய்ப்பின், யான்'எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே!" [குறு - 25]

இப்பாடலை இயற்றியவர் கபிலர்.

[எவன் செய்கோ - என்ன செய்வேன்;
தினைத்தாள் - தினைக்கதிரின் அடிப்பகுதி;
ஞான்று - பொழுது;
கால - கால்களை உடையன]

சாட்சிகள் இல்லையென்றாலும், சந்தர்ப்பசூழ்நிலைகளைக் கொண்டு, அத்தலைவனுக்கு ஆயுள்தண்டனை விதிக்க வேண்டியதுதான் - வந்து அத்தலைவியையே மணந்துகொண்டு அவளுடன் இல்லறம் நடத்த வேண்டுமென்று!

Saturday, August 1, 2009

11. அவர் பொய் வழங்கலர்

ஒருவன் பொய் சொல்கிறானா மெய் சொல்கிறானா என்றறிய இக்காலத்திற் போல அக்காலத்தில் கருவிகள் இல்லை; ஒருவனுடைய தோற்றம், செயல், நடையுடைபாவனை முதலியவற்றைக்கொண்டுதான் அவன் சொல்வதையறியலாம். அவ்வாறறிதல் எல்லாராலும் இயலாது. எனவே நம்பிக்கைதான் தேவை. சிலசமயங்களில் இந்நம்பிக்கை தவறாகவும் முடியலாம். எவ்வாறாயினும் நம்பிக்கையில்லாமல் எதுவும் நடைபெறாது. நம்பிக்கையில்லாமல் முடி திருத்துவோரிடம் தலையைக் கொடுக்கமுடியுமா? வேலையாட்களைத்தான் வேலை வாங்க முடியுமா? எனவே நம்பிக்கையில்லாமல் உலகமே இல்லை எனலாம். கணவன் மனைவிக்குள் இந்த நம்பிக்கை மிகமிக இன்றியமையாதது.

ஒரு தலைவன் தலைவியிடம் கார்காலம் வருவதற்குள் வந்துவிடுவேன் என்று உறுதியாகக் கூறி வற்புறுத்திப் பிரிந்தான். அந்த நம்பிக்கையினால் அவளும் பிரிவுத்துன்பம் வாட்டியபோதும் கார்காலம் வரவில்லை என்பதால் பொறுத்திருந்தாள். அக்காலம் நெருங்குவதற்கான அறிகுறிகள் தோன்றலாயின. இவற்றைக் கண்டு, தலைவன் வராமலிருப்பது குறித்துத் தலைவி வருந்தத் தொடங்கினால் என்ன செய்வது? எப்படி அவள் துயரைப் போக்குவது? என்று தோழிக்குக் கவலையுண்டாயிற்று. இதனைக் குறிப்பினால் உணர்ந்த தலைவி கார்காலம் வரவில்லை என்ற தன் நம்பிக்கையைக் கூறுகிறாள்.

சில மகளிர் பொன்னாற் செய்த அழகிய அணிகலன்களை அணிந்திருந்தனர். வண்டுகள் மொய்க்கும்படி நெருக்கமாக மலர்ந்த பூக்களையுடைய கொடியில், வேறு பூங்கொத்துக்களையும், இடையிடையே புதிதாக மலர்ந்த கொன்றைப்பூக்களையும் சேர்த்துக் கட்டிய மாலையைக் கன்னங்களையொட்டித் தோன்றும்படி அணிந்திருந்தனர். அவர்களது கரிய தலைமுடி கார்கால மேகத்தை நினைவூட்டியது; கொன்றையும் பிறபூக்களும் கார்காலத்தில் தோன்றுவனவாதலால், அவையும் கார்காலம் வந்துவிட்டதென்பதைப் பறைசாற்றின. ஆயினும் தலைவி இவற்றாலெல்லாம் கார்காலம் வந்ததை நம்பத் தயாராயில்லை. ஏனெனில், தலைவன் கூறியபடி இன்றும் வந்து சேரவில்லை. எனவே கார்காலமும் வரவில்லை என்பது அவள் கருத்து. தலைவியைப் பொறுத்தவரையில், தலைவன் சொன்னசொல் தவறாதவன்; பொய் கூறுதலை அறியாதவன். இப்பொழுது உண்மையிலேயே கார்காலம் வந்திருந்தால் அவனும் வந்திருப்பான். அவன் வரவில்லையாதலால் கார்காலமும் வரவில்லை. இவையெல்லாம் கார்காலத்தின் வரவைக் குறிப்பன என்பதை நான் நம்பத் தயாராயில்லை என்று தலைவி நம்பிக்கையுடன், ஆனால் உறுதியாகக் கூறுகிறாள். இதனை விளக்கும் செய்யுள்:

"வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றை
கானம் 'கார்'எனக் கூறினும்
யானோ தேறேன்! அவர்பொய் வழங்கலரே!" [குறு - 21]

இப்பாடலாசிரியர் ஓதலாந்தையார்.

[ததைந்த - நெருங்கிய;
இணர் - பூங்கொத்து;
இடையிடுபு - இடையில் வைத்து;
புனையிழை - அழகிய ஆபரணங்கள்;
கதுப்பில் - தலை முடியில்; கன்னப் பகுதியில்;
தேறேன் - நம்பமாட்டேன்]

10. சிவப்பும் புளிப்பும்

ஒரு தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றான். அவன் மீண்டும் வந்து தலைவியைக் காண விரும்பித் தோழியிடம் குறை வேண்டினான். இவ்வாறு தலைவன் வேண்டுதலை 'வாயில் வேண்டல்' என்பர். வாயில் என்பது தூது. தோழி தலைவியிடம் தூதாகச் சென்று தன்குறை முடிக்க வேண்டும் என்பது இதன் கருத்து. இதற்கு அவள் உடன்படவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம். இங்கு தோழி தலைவியின் கோபத்தை எடுத்துக்கூறி வாயில் மறுத்த செய்தி கூறப்படுகிறது.

"தலைவனே! அழகிய பொய்கைகள் சூழ்ந்த குளிர்ச்சியான் ஊர்தான் எங்கள் ஊர். ஆயினும் கொடிய விஷப்பாம்புகள் திரியும் தெருக்களின் வழியாக எங்களைக் காண வருகிறாய். நீ இரவுப் பொழுதில் இவ்வழியாக வரும் துன்பத்திற்காகவும், பாம்புகளால் உனக்குத் துன்பம் நேருமோ என்று அஞ்சியும், இதுநாள் வரை உனது துன்பத்தை நீக்கி மகிழ்வூட்டினோம்.

"தேன் இனிமையானதுதான். எனினும் அதை அதிகமாகச் சுவைத்தால், சலிப்பேற்பட்டுப் புளிக்கத் தொடங்கிவிடும். அதுபோலவே நீர்நிலைகளில் அதிக நேரம் குளித்துத் துளைந்து ஆடினால், கண்கள் சிவந்து போகும் என்பர். நீயும் அதிக நாட்கள் எங்களுடன் பழகியதால் உனக்குச் சலிப்பேற்பட்டு விட்டதோ? அதன் விளைவாக நீ மீண்டும் எங்களைப் பிரிந்து செல்வதாயிருந்தால் தந்தை இருக்கும் எங்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டுப் பிறகு உனக்கு வேண்டிய இடத்திற்குச் செல்" என்று தோழி கூறினாள்.

இதில் 'கடும் பாம்பு வழங்கும் தெரு' என்றதனால் கொடிய பரத்தையர்கள் வாழும் தெரு அது; அவ்வழியாக நீ வரும்போது அவர்கள் உன்னைக் கவர்ந்து கொள்ளவும் கூடும். எங்கள் மேல் உள்ள சலிப்பினால் நீ அவர்களின் பின்னால் போய்விடுவாய் என்ற குறிப்பு உள்ளது. இனி அப்பாடல்:

"நீர்நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனை யாயின் எம்'இல் உய்த்துக் கொடுமோ!
அம்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே" (குறு - 354)

பாடியவர் - கயத்தூர் கிழான்.

[ஆர்ந்தோர் - சுவைத்தோர்;
தணந்தனை - பிரிந்தால்;
அஞர் எவ்வம் - பெருந்துன்பம்;
எம்மே - எங்களை]

Saturday, July 25, 2009

9. உயிர்தானே போகும்?

தலைவனும் தலைவியும் களவுக்காலத்தில் பலமுறை தனியிடங்களிற் கூடி மகிழ்வர். ஊர் மக்களில் சிலர் இதனை அறிந்தால் தமக்குள் பலவிடங்களில் சந்தித்துப் பலவாறு பேசுவர். இவ்வாறு சிலரும் பலரும் பேசுவதை 'அம்பல்' என்றும் 'அலர்தூற்றல்' என்றும் கூறுவர்.

தோழி ஒருத்தி தலைவன் பிரிந்து சென்றபின் தலைவி வருந்துவதைக் கண்டாள்; 'அவன் திரும்பிவந்து மணந்து கொள்ளும் வரை, உன்னால் அவன் பிரிவை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?' என்று வினாவினாள். அவளுக்குத் தலைவி கூறிய மறுமொழி இது:-

"சிறிய கடற்காகம் ஒன்று கடல் மீது பறந்து சென்று தன் செவ்வாயின் பேரலகினால் மீனைக் கொத்த முயன்றது. அப்போது எழுந்த பேரலை ஒன்று காக்கையின் மேல் மோதி அதன் முதுகையெல்லாம் ஈரமாக்கியது. நீர்த்திவலைகளால் ஈரமாகிய அக்காக்கை குளிரை வெறுத்து பூக்கள் பல நிறைந்த கரையிலேயே தங்கி விட்டது. இத்தகைய கடற்கரை ஊரைச் சேர்ந்தவன் நம் தலைவன். நம்மைப் பிரிந்த அவன் வராமலிருந்தால், நாம் இழப்பதற்கு நம் இனிய உயிரைத்தவிர வேறென்ன இருக்கிறது நம்மிடம்?நம்முடைய அழகும் நலனும் போன்ற எல்லாம் முன்னமே அவனுடன் சென்றுவிட்டனவே!" என்றாள்.

காக்கையின்மேல் நீர்த்திவலைகள் தெறித்து ஈரமாக்கியது போல, இவ்வூர் மக்கள் தலைவனைப் பழித்து அலர்தூற்றுவர்; ஈரமாகிய காக்கை கரையிலேயே தங்கியதுபோல் அவன் வருந்துணையும் நாம் ஆற்றியிருப்போம். ஆற்ற முடியவில்லையாயினும் நம்மிடம் உயிரைத் தவிர இழப்பதற்கு ஒன்றுமில்லையே! ஆகையால் உயிர் துறப்போம்; என்ற கருத்து இதில் மறைந்திருப்பதை உணரலாம். இதற்குரிய செய்யுள்:

"சிறுவெண் காக்கைச் செவ்வாய்ப் பெருந்தோடு
எறிதிரைத் திவலை ஈர்ம்புறம் நனைப்பப்
பனிபுலந்து உறையும் பல்பூங் கானல்
இருநீர்ச் சேர்ப்பன் நீப்பின் ஒருநம்

இன்னுயி ரல்லது பிறிதொன்று
எவனோ, தோழி! நாமிழப் பதுவே?" (குறு - 334)

இப்பாடலை இயற்றியவர் இளம்பூதனார் என்ற புலவர்.

[பெருந்தோடு - பெரிய அலகு;
ஈர்ம்புறம் - ஈரமான முதுகு;
பனிபுலந்து - குளிரை வெறுத்து;
நீப்பின் - பிரிந்தால்;
எவனோ - எதுவோ (எதுவுமில்லை என்பது கருத்து)]

Wednesday, July 22, 2009

8. நரகம் புகுக

ஒருவர் நாம் விரும்பியதைக் கொடுக்காவிட்டாலும், நமது செயலை மற்றவர் தடுத்தாலும், அவர்கள் மேல் நமக்கு வெறுப்பும் கோபமும் தோன்றுவது இயல்பு. ஆனால் இங்கு ஒரு பெண் மற்றவர்களையல்லாமல், தன் தாயையே நரகம் போகட்டும் என்று கூறுகிறாள். இதற்குரிய பின்னணியை இங்குக் காண்போம்.

களவுக்காலத்தில் தலைவன் இரவிலும் பகலிலும் மாறி மாறி வந்து தலைவியைக் கூடி மகிழ்வதுண்டு. ஒருமுறை இரவிலே தலைவியைக் காண வந்தான். முடியவில்லை. காரணம், தலைவியின் தோற்றத்திலும் செயல்களிலும் முன்பு போல் இல்லாமல் மாறுபாடு உண்டாயிருப்பதைக் கண்டாள் தாய். சந்தேகம் கொண்ட அவள் சில கட்டுப்பாடுகள் விதித்தாள்; வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுத்தாள்; மேலும் கண்காணிக்கத் தொடங்கினாள். இவ்வாறு சிறைப்படுத்தியதுபோலத் தலைவியை வீட்டிலேயே அடைத்து வைப்பது 'இற்செறிப்பு' எனப்படும்.

இவ்வாறு இற்செறிக்கப்பட்ட தலைவியின் நிலைபற்றித் தோழி தலைவனுக்கு, மற்றவர்கள் அறியாமல், மதிற்புறத்தின் வெளியே சென்று மறைமுகமாக யாரிடமோ பேசுவதுபோல் பேசி அறிவிப்பாள்; காவல் மிகுதியாயிருப்பதால், தலைவி வெளிவரமாட்டாள்; விரைவில் திருமணத்திற்குரிய செயல்களை மேற்கொள்க என்று கூறுவாள். இவ்வாறு அவள் கூறும்போது இங்கு ஒரு வரலாற்றுச் செய்தியையும் கூறுகிறாள்.

நன்னன் என்ற பெயருடைய ஒரு சிற்றரசன். அவன் வீரமுடையவனாயிருந்தும் ஒரு கொடுஞ்செயலைச் செய்தான். அவனது அரண்மனைத் தோட்டத்தில் ஒரு மாமரம் இருந்தது. அதிலிருந்து விழுந்த மாங்காய் ஒன்று அருகிலிருந்த ஆற்றில் மிதந்து சென்றது. அவ்வாற்றில் நீராடுவதற்காக வந்த ஒரு பெண் மிதந்து வந்த அக்காயை எடுத்துத் தின்றுவிட்டாள். காவலர் மூலமாக இதனை அறிந்த நன்னன் அப்பெண்ணுக்கு மரணதண்டனை விதித்து விட்டான். நீரில் மிதந்து சென்ற காயை எடுத்துத் தின்றதுதான் அவள் செய்த குற்றம்.

பெண்ணுக்கு மரணதண்டனை என்றறிந்ததும், அவள் தந்தை அரசனிடம் சென்று முறையிட்டான்; மன்றாடினான். அவளது குற்றத்திற்குப் பரிகாரமாக ஒன்பது பெரிய யானைகளைத் தருவதாகக் கூறினான்; ஒன்றுக்கு ஒன்பது மடங்காகத் தருவதாகவும் கூறினான்; அரசன் கேட்கவில்லை. தன் பெண்ணின் எடைக்கு எடை தங்கத்தால் செய்த, அவள்போன்ற பதுமையைத் தருவதாகக் கூறினான். இவ்வளவு கூறியும் அவ்வரசன் கேட்கவில்லை! தண்டனையை நிறைவேற்றி விட்டான். பெண்கொலை புரிந்த இப்பாவத்திற்காகப் புலவர்கள் யாவரும் அவனைப் பாடுவதைத் தவிர்த்தனர். முடிவில் அவன் நரகம் புக்கதாகவும் கூறப்படுகிறது.

இனி நாம் தலைப்பிற்குச் செல்வோம். தலைவன் தலைவியைப் பிரிந்து பல நாட்களுக்குப் பின், ஒருநாள் அவளைக் காணப்போகிறோமென்று மகிழ்ச்சியுடன் வந்தான். ஆனால், தாய் அவன் தலைவியைப் பார்க்க விடாமல் காவல் போட்டு அவளை வீட்டில் அடைத்து விட்டாள். அது மட்டுமல்லாமல், பகைவர்களால் சூழப்பட்ட ஊரில் வாழும் மக்கள் எப்படி இரவு முழுதும் உறங்காமல் விழிப்புடனிருந்து தமது ஊரைக் காப்பார்களோ அதுபோல், தாயும் உறக்கம் என்பதில்லாமல் தலைவியைக் காத்திருந்தாள். இவ்வாறு காவல் மிகுதியாயிருந்த செய்தியைச் சிறைப்புறமாகத் தலைவனுக்கு அறிவுறுத்திய தோழி, பெண்கொலை புரிந்த நன்னனைப்போல இத்தாயும் நீங்காத நரகத்திற்குச் செல்வாளாக என்று முடிக்கிறாள். இதற்குரிய செய்யுள் வருமாறு:

" மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றோடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்,
பெண்கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீ'இயரோ! அன்னை;
ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இவளே!" (குறு - 292)

[மண்ணிய - நீராட;
வரையா நிரையம் - நீங்காத நரகம்;
செலீ'இயர் - செல்வானாக]

இப்பாடலையும் இதில் ஒரு வரலாற்றுச் செய்தியையும் தந்தவர் பரணர் என்ற புலவர். அநேகமாக இவரது பாடல்களிலெல்லாம் ஏதாவதொரு வரலாற்றுச் செய்தி அமைந்திருக்கும். இந்நன்னனைப் பற்றிய செய்தி புறநானூற்றில் வேறுசில புலவர்களாலும் கூறப்பட்டுள்ளது.