Showing posts with label குருகு சாட்சி. Show all posts
Showing posts with label குருகு சாட்சி. Show all posts

Thursday, August 6, 2009

12. குருகு சாட்சி

உலகில் திருட்டுக் குற்றம், கொலைக்குற்றம் முதலிய எந்தக் குற்ற வழக்காயிருந்தாலும், நீதிமன்றங்களுக்குச் செல்லும்போது, நேரில் பார்த்த சாட்சியங்கள் அல்லது தடயங்கள் அவசியம். இவற்றில் எதுவும் இல்லையானால் குற்றங்களை உறுதிப்படுத்துவது அரிதாகிவிடும்.

இங்கு ஒரு தலைவி தலைவனிடம் தன் நெஞ்சத்தைப் பறிகொடுத்தாள்; விரைந்து வந்து வரைந்து கொள்வேன் என்று கூறிச் சென்ற அவன் திரும்ப வந்தானில்லை. தலைவியின் வாட்டம் அதிகமாயிற்று. தன் தோழியிடம் அவனைக் கள்வன் என்று குற்றஞ் சாட்டுகிறாள். அக்குற்றத்தை வலியுறுத்த அவளிடம் சாட்சியங்கள் இல்லை; இதுகுறித்துத் தோழியிடம் தன் கவலையைப் பகிர்ந்துகொள்கிறாள். "தோழி! தலைவனும் நானும் பழகியதைப் பார்த்தவர்கள் யாரும் இல்லை; அவனே களவொழுக்கத்தால் திருட்டுத்தனமாக வந்த கள்வன்தானே! என் நெஞ்சத்தையும் நலனையும் கவர்ந்து சென்ற கள்வன், இதனை மறுத்து 'இல்லை' எனக் கூறினால் நான் என்ன செய்வேன்?"

இவ்வாறு சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவளுக்கு மின்னல் போல ஒரு நினைவு தோன்றிற்று. ஆம்! அவர்கள் இருவரும் மகிழ்ந்திருந்த வேளையில், அங்கே சற்றுத்தொலைவிலிருந்த ஒரு நீரோடையில் ஒரு குருகு (நாரை) நின்று கொண்டிருந்தது! தினைக்கதிர்கள் முற்றியபின் அறுவடைசெய்த இடத்தில் அவற்றின் அடித்தாள்கள் இருக்குமல்லவா! அத்தாள்களை (அடிப்பகுதி)ப் போன்ற சிறிய பசுமையான கால்களை உடையது அக்குருகு. இதுபோன்ற பல குருகுகள் அங்கு இருந்தன. அவைகள் அங்கே கூடியிருந்த தலைவனையும் தலைவியையுமா பார்த்துக் கொண்டிருந்தன? ஓடிக் கொண்டிருந்த அந்நீரோடையில் தங்களுக்கேற்ற உணவான ஆரல்மீன்கள் எப்போது வரும் என்றல்லவா எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தன!

"தங்கள் உணவை எதிர்நோக்கி அதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த அந்நாரைகள் எங்களைப் பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்! ஆனால் எங்களைத் தவிர அவைதான் அங்கிருந்தன" என்று தோழியிடம் சொல்லித் துயருற்றாள் தலைவி.

இனி இப்பாடலைப் பார்ப்போம்:

"யாரும் இல்லை; தானே கள்வன்;
தான்'அது பொய்ப்பின், யான்'எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே!" [குறு - 25]

இப்பாடலை இயற்றியவர் கபிலர்.

[எவன் செய்கோ - என்ன செய்வேன்;
தினைத்தாள் - தினைக்கதிரின் அடிப்பகுதி;
ஞான்று - பொழுது;
கால - கால்களை உடையன]

சாட்சிகள் இல்லையென்றாலும், சந்தர்ப்பசூழ்நிலைகளைக் கொண்டு, அத்தலைவனுக்கு ஆயுள்தண்டனை விதிக்க வேண்டியதுதான் - வந்து அத்தலைவியையே மணந்துகொண்டு அவளுடன் இல்லறம் நடத்த வேண்டுமென்று!