Showing posts with label இற்செறிப்பு. Show all posts
Showing posts with label இற்செறிப்பு. Show all posts

Wednesday, July 22, 2009

8. நரகம் புகுக

ஒருவர் நாம் விரும்பியதைக் கொடுக்காவிட்டாலும், நமது செயலை மற்றவர் தடுத்தாலும், அவர்கள் மேல் நமக்கு வெறுப்பும் கோபமும் தோன்றுவது இயல்பு. ஆனால் இங்கு ஒரு பெண் மற்றவர்களையல்லாமல், தன் தாயையே நரகம் போகட்டும் என்று கூறுகிறாள். இதற்குரிய பின்னணியை இங்குக் காண்போம்.

களவுக்காலத்தில் தலைவன் இரவிலும் பகலிலும் மாறி மாறி வந்து தலைவியைக் கூடி மகிழ்வதுண்டு. ஒருமுறை இரவிலே தலைவியைக் காண வந்தான். முடியவில்லை. காரணம், தலைவியின் தோற்றத்திலும் செயல்களிலும் முன்பு போல் இல்லாமல் மாறுபாடு உண்டாயிருப்பதைக் கண்டாள் தாய். சந்தேகம் கொண்ட அவள் சில கட்டுப்பாடுகள் விதித்தாள்; வீட்டை விட்டு வெளியே செல்ல விடாமல் தடுத்தாள்; மேலும் கண்காணிக்கத் தொடங்கினாள். இவ்வாறு சிறைப்படுத்தியதுபோலத் தலைவியை வீட்டிலேயே அடைத்து வைப்பது 'இற்செறிப்பு' எனப்படும்.

இவ்வாறு இற்செறிக்கப்பட்ட தலைவியின் நிலைபற்றித் தோழி தலைவனுக்கு, மற்றவர்கள் அறியாமல், மதிற்புறத்தின் வெளியே சென்று மறைமுகமாக யாரிடமோ பேசுவதுபோல் பேசி அறிவிப்பாள்; காவல் மிகுதியாயிருப்பதால், தலைவி வெளிவரமாட்டாள்; விரைவில் திருமணத்திற்குரிய செயல்களை மேற்கொள்க என்று கூறுவாள். இவ்வாறு அவள் கூறும்போது இங்கு ஒரு வரலாற்றுச் செய்தியையும் கூறுகிறாள்.

நன்னன் என்ற பெயருடைய ஒரு சிற்றரசன். அவன் வீரமுடையவனாயிருந்தும் ஒரு கொடுஞ்செயலைச் செய்தான். அவனது அரண்மனைத் தோட்டத்தில் ஒரு மாமரம் இருந்தது. அதிலிருந்து விழுந்த மாங்காய் ஒன்று அருகிலிருந்த ஆற்றில் மிதந்து சென்றது. அவ்வாற்றில் நீராடுவதற்காக வந்த ஒரு பெண் மிதந்து வந்த அக்காயை எடுத்துத் தின்றுவிட்டாள். காவலர் மூலமாக இதனை அறிந்த நன்னன் அப்பெண்ணுக்கு மரணதண்டனை விதித்து விட்டான். நீரில் மிதந்து சென்ற காயை எடுத்துத் தின்றதுதான் அவள் செய்த குற்றம்.

பெண்ணுக்கு மரணதண்டனை என்றறிந்ததும், அவள் தந்தை அரசனிடம் சென்று முறையிட்டான்; மன்றாடினான். அவளது குற்றத்திற்குப் பரிகாரமாக ஒன்பது பெரிய யானைகளைத் தருவதாகக் கூறினான்; ஒன்றுக்கு ஒன்பது மடங்காகத் தருவதாகவும் கூறினான்; அரசன் கேட்கவில்லை. தன் பெண்ணின் எடைக்கு எடை தங்கத்தால் செய்த, அவள்போன்ற பதுமையைத் தருவதாகக் கூறினான். இவ்வளவு கூறியும் அவ்வரசன் கேட்கவில்லை! தண்டனையை நிறைவேற்றி விட்டான். பெண்கொலை புரிந்த இப்பாவத்திற்காகப் புலவர்கள் யாவரும் அவனைப் பாடுவதைத் தவிர்த்தனர். முடிவில் அவன் நரகம் புக்கதாகவும் கூறப்படுகிறது.

இனி நாம் தலைப்பிற்குச் செல்வோம். தலைவன் தலைவியைப் பிரிந்து பல நாட்களுக்குப் பின், ஒருநாள் அவளைக் காணப்போகிறோமென்று மகிழ்ச்சியுடன் வந்தான். ஆனால், தாய் அவன் தலைவியைப் பார்க்க விடாமல் காவல் போட்டு அவளை வீட்டில் அடைத்து விட்டாள். அது மட்டுமல்லாமல், பகைவர்களால் சூழப்பட்ட ஊரில் வாழும் மக்கள் எப்படி இரவு முழுதும் உறங்காமல் விழிப்புடனிருந்து தமது ஊரைக் காப்பார்களோ அதுபோல், தாயும் உறக்கம் என்பதில்லாமல் தலைவியைக் காத்திருந்தாள். இவ்வாறு காவல் மிகுதியாயிருந்த செய்தியைச் சிறைப்புறமாகத் தலைவனுக்கு அறிவுறுத்திய தோழி, பெண்கொலை புரிந்த நன்னனைப்போல இத்தாயும் நீங்காத நரகத்திற்குச் செல்வாளாக என்று முடிக்கிறாள். இதற்குரிய செய்யுள் வருமாறு:

" மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
ஒன்பதிற்று ஒன்பது களிற்றோடு அவள்நிறை
பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்,
பெண்கொலை புரிந்த நன்னன் போல,
வரையா நிரையத்துச் செலீ'இயரோ! அன்னை;
ஒருநாள், நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இவளே!" (குறு - 292)

[மண்ணிய - நீராட;
வரையா நிரையம் - நீங்காத நரகம்;
செலீ'இயர் - செல்வானாக]

இப்பாடலையும் இதில் ஒரு வரலாற்றுச் செய்தியையும் தந்தவர் பரணர் என்ற புலவர். அநேகமாக இவரது பாடல்களிலெல்லாம் ஏதாவதொரு வரலாற்றுச் செய்தி அமைந்திருக்கும். இந்நன்னனைப் பற்றிய செய்தி புறநானூற்றில் வேறுசில புலவர்களாலும் கூறப்பட்டுள்ளது.