ஒருவன் பொய் சொல்கிறானா மெய் சொல்கிறானா என்றறிய இக்காலத்திற் போல அக்காலத்தில் கருவிகள் இல்லை; ஒருவனுடைய தோற்றம், செயல், நடையுடைபாவனை முதலியவற்றைக்கொண்டுதான் அவன் சொல்வதையறியலாம். அவ்வாறறிதல் எல்லாராலும் இயலாது. எனவே நம்பிக்கைதான் தேவை. சிலசமயங்களில் இந்நம்பிக்கை தவறாகவும் முடியலாம். எவ்வாறாயினும் நம்பிக்கையில்லாமல் எதுவும் நடைபெறாது. நம்பிக்கையில்லாமல் முடி திருத்துவோரிடம் தலையைக் கொடுக்கமுடியுமா? வேலையாட்களைத்தான் வேலை வாங்க முடியுமா? எனவே நம்பிக்கையில்லாமல் உலகமே இல்லை எனலாம். கணவன் மனைவிக்குள் இந்த நம்பிக்கை மிகமிக இன்றியமையாதது.
ஒரு தலைவன் தலைவியிடம் கார்காலம் வருவதற்குள் வந்துவிடுவேன் என்று உறுதியாகக் கூறி வற்புறுத்திப் பிரிந்தான். அந்த நம்பிக்கையினால் அவளும் பிரிவுத்துன்பம் வாட்டியபோதும் கார்காலம் வரவில்லை என்பதால் பொறுத்திருந்தாள். அக்காலம் நெருங்குவதற்கான அறிகுறிகள் தோன்றலாயின. இவற்றைக் கண்டு, தலைவன் வராமலிருப்பது குறித்துத் தலைவி வருந்தத் தொடங்கினால் என்ன செய்வது? எப்படி அவள் துயரைப் போக்குவது? என்று தோழிக்குக் கவலையுண்டாயிற்று. இதனைக் குறிப்பினால் உணர்ந்த தலைவி கார்காலம் வரவில்லை என்ற தன் நம்பிக்கையைக் கூறுகிறாள்.
சில மகளிர் பொன்னாற் செய்த அழகிய அணிகலன்களை அணிந்திருந்தனர். வண்டுகள் மொய்க்கும்படி நெருக்கமாக மலர்ந்த பூக்களையுடைய கொடியில், வேறு பூங்கொத்துக்களையும், இடையிடையே புதிதாக மலர்ந்த கொன்றைப்பூக்களையும் சேர்த்துக் கட்டிய மாலையைக் கன்னங்களையொட்டித் தோன்றும்படி அணிந்திருந்தனர். அவர்களது கரிய தலைமுடி கார்கால மேகத்தை நினைவூட்டியது; கொன்றையும் பிறபூக்களும் கார்காலத்தில் தோன்றுவனவாதலால், அவையும் கார்காலம் வந்துவிட்டதென்பதைப் பறைசாற்றின. ஆயினும் தலைவி இவற்றாலெல்லாம் கார்காலம் வந்ததை நம்பத் தயாராயில்லை. ஏனெனில், தலைவன் கூறியபடி இன்றும் வந்து சேரவில்லை. எனவே கார்காலமும் வரவில்லை என்பது அவள் கருத்து. தலைவியைப் பொறுத்தவரையில், தலைவன் சொன்னசொல் தவறாதவன்; பொய் கூறுதலை அறியாதவன். இப்பொழுது உண்மையிலேயே கார்காலம் வந்திருந்தால் அவனும் வந்திருப்பான். அவன் வரவில்லையாதலால் கார்காலமும் வரவில்லை. இவையெல்லாம் கார்காலத்தின் வரவைக் குறிப்பன என்பதை நான் நம்பத் தயாராயில்லை என்று தலைவி நம்பிக்கையுடன், ஆனால் உறுதியாகக் கூறுகிறாள். இதனை விளக்கும் செய்யுள்:
"வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றை
கானம் 'கார்'எனக் கூறினும்
யானோ தேறேன்! அவர்பொய் வழங்கலரே!" [குறு - 21]
இப்பாடலாசிரியர் ஓதலாந்தையார்.
[ததைந்த - நெருங்கிய;
இணர் - பூங்கொத்து;
இடையிடுபு - இடையில் வைத்து;
புனையிழை - அழகிய ஆபரணங்கள்;
கதுப்பில் - தலை முடியில்; கன்னப் பகுதியில்;
தேறேன் - நம்பமாட்டேன்]
Showing posts with label ஓதலாந்தையார். Show all posts
Showing posts with label ஓதலாந்தையார். Show all posts
Saturday, August 1, 2009
Subscribe to:
Posts (Atom)