Thursday, September 10, 2009

16. யார்கொல் அளியர்

ஒரு தலைவி உடன்போக்கு மேற்கொண்டு தலைவனுடன் அவனூரில் சென்று வாழத்துணிந்தாள். வழியில் ஏற்படும் தொல்லைகளைப்பற்றிக் கவலைப்படாமல் புறப்பட்டுவிட்டாள். அவ்விருவரும் காட்டு வழியில் செல்வதைச் சில வழிப்போக்கர்கள் கண்டனர். அவ்விருவர்மேலும் இரக்கம் கொண்டு அவர்கள் தங்களுக்குள் பின்வருமாறு பேசிக் கொண்டனர்:

"வீரனைப்போல் தோன்றும் இத்தலைவன் வில்லேந்தியிருக்கிறான்; கால்களில் வீரக்கழலணிந்திருக்க்கிறான். அவனைப் போலவே தலைவியும் வளையல்களை அணிந்திருக்கிறாள்; அவளது மெல்லிய பாதங்களிலும் சிலம்புகள் உள்ளன. நல்லவர்களாகக் காணப்படும் இவர்கள் யாரோ தெரியவில்லையே! மூங்கில் மரங்கள் நிறைந்த இந்தக் காட்டுவழியை மேற்கொண்ட இவர்கள் பாவம் இரங்கத்தக்கவர்கள்! இக்காட்டிலுள்ள வாகை மரங்களின் காய்ந்த வெண்மையான நெற்றுகள் காற்று வீசுவதால் அசைந்து ஒலிக்கின்றன. இவ்வொலி, ஆரியக்கூத்தாடுகின்றவர்கள் கயிற்றின் மேலிருந்து ஆடும்பொழுது முழங்கும் பறையொலிபோலப் பயங்கரமாக ஒலிக்கின்றது. அச்சந்தரும் இக்காட்டுவ்ழியை மேற்கொண்ட இக்காதலர்கள் உண்மையிலேயே இரங்கத்தக்கவர்கள்தாம்!"

இக்கருத்தமைந்த பாடலின் ஆசிரியர் பெரும்பதுமனார்.

"வில்லோன் காலன கழலே, தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே! ஆரியர்
கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி
வாகை வெண்ணெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே!" [குறு - 7]

[காலன - காலில் இருப்பவை; அளியர் - இரங்கத்தக்கவர்; ஆரியர் - கூத்துவகைகளில் ஒன்றான ஆரியக்கூத்தை ஆடுபவர்கள்; கால்பொர - காற்று மோதுவதால்; அழுவம் - காடு]

No comments:

Post a Comment