Sunday, August 16, 2009

14. "இன்னும் பாடுக"

நாம் எண்ணியது நிறைவேறுமா எனவும், துன்பங்கள் உண்டாகும்போது அவை எப்போது நீங்கும் எனவும் அறிவதற்காகக் குறி கேட்டல், சோழியிட்டுப் பார்த்தல் முதலியவற்றை இக்காலத்திலும் சிலர் மேற்கொள்கின்றனர். அதுபோல அக்காலத்திலும் முறத்தில் நெல், அரிசி முதலியன இட்டும், சோழிகளின் எண்ணிக்கை கொண்டும் குறி கூறுதல் உண்டு. இதனைக் 'கட்டுக் காணுதல்' என்பர். இவ்வாறு பார்த்துக் குறி சொல்வோரைக் 'கட்டுவிச்சி' என்பர். குறிசொல்லும்போது தெய்வங்களை அழைத்து அவள் பாடுதலால் 'அகவன் மகள்' என்றும் அவர்களைக் கூறுவர்.

தலைவனைப் பிரிந்த வருத்தத்தால் தலைவி உண்ணாமலும், உறங்காமலும், தோழிகளோடு விளையாடாமலும், யாவருடனும் பேசிச் சிரித்து மகிழாமலும் இருப்பாள். இவளது நிலை கண்ட தாய், இது தெய்வக்குற்றத்தால் ஏற்பட்டதோ, ஏதேனும் நோயினால் உண்டானதா எனக் கவலை கொள்வாள். அப்பொழுது கட்டுவிச்சியை அழைத்து உண்மையைக் கண்டுகூறும்படி கேட்பாள். இதுபோன்ற சமயங்களில் வெறியாட்டயர்தலும் உண்டு. அதுபற்றி முன்னமே பார்த்துள்ளோம்.

இப்பொழுது ஒரு தலைவியின் நோய்க்கான காரணத்தை அறிய அவள்தாய் கட்டுவிச்சியை அழைத்துக் குறி கேட்டாள். அவளும் வந்து தெய்வங்களை அழைத்துப் பாடத் தொடங்கினாள். அவள் பாடிய பாட்டினிடையே தலைவனுடைய மலையின் பெயரும் வந்தது. அதனைக் கேட்ட தோழி, "தெய்வங்களை அழைத்துப் பாடும் அம்மையே! சங்குமணிகளைக் கோத்தது போலச் சுருண்ட கூந்தலை உடையவளே! இப்பொழுது நீ பாடிய அந்தப் பாடலை - தலைவனது நெடிய குன்றத்தைப் பற்றிய அந்தப் பாடலை - இன்னும் பாடுக; இதைக்கேட்டே எங்கள் தலைவியின் நோய் நீங்குமாதலால், அந்தப் பாட்டை இன்னும் பாடுக!" என்று கூறினாள். இவ்வாறு கூறுவதால், தலைவியின் நோய்க்குக் கடவுட்குற்றம் காரணமன்று; தலைவனைப் பிரிந்தமையே காரணம் என்பதைக் குறிப்பாகத் தோழி செவிலிக்கு உணர்த்தினாள். இவ்வாறு உண்மை உணர்த்துவது 'அறத்தொடுநிலை' எனப்படும். இங்கு தோழி செவிலிக்கு உணர்த்தியதுபோலத் தலைவியே தோழிக்கு உணர்த்தலும், செவிலி ந்ற்றாய்க்கு உணர்த்தலும், நற்றாய் தந்தை தன்னையர்க்கு உணர்த்தலும் 'அறத்தொடுநிலை' எனப்படும்.

தோழியின் சொற்கேட்ட செவிலி, தலைவனைப் பற்றி அறிந்து, அவனுடன் தலைவியைச் சேர்த்துவைக்கும் மண ஏற்பாடுகளைத் தொடங்குவாள் என்பது கூற வேண்டியதில்லை.

"அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே;
இன்னும் பாடுக பாட்டே! அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே!" [குறு - 23]

இப்பாடலியற்றிய புலவர் ஔவையார்.

[அகவல் - அழைத்தல்;
மனவுக்கோப்பு - சங்குமணிகளைக் கோத்த மாலை; (அது சுருண்ட வெண்மையான கூந்தலுக்கு உவமை)]

No comments:

Post a Comment