Showing posts with label மோர்க்குழம்பு. Show all posts
Showing posts with label மோர்க்குழம்பு. Show all posts

Saturday, July 11, 2009

3. மோர்க்குழம்பும் முகமலர்ச்சியும்

குறுந்தொகையிலிருந்து "கூடலூர்கிழார்" என்ற புலவர் பாடிய மற்றொரு காட்சி. ஒரு தாய் தன் மகளைச் செல்லமாக வளர்க்கிறாள். சமையல் செய்யவோ வீட்டு வேலைகளைச் செய்யவோ விடுவதில்லை. இப்படியே வளர்ந்த பெண்ணுக்கு வயது வந்ததும் திருமணம் முடித்தாள். இவள் கணவன் வீடு சென்றால் எப்படிக் குடும்பம் நடத்துவாளோ, என்ன செய்வாளோ என்ற கவலை உண்டாயிற்று அந்தத் தாய்க்கு. எப்படியும் ஒரு நாள் போய்த்தானே ஆக வேண்டும்! அனுப்பி வைத்தாள்; அவளும் போனாள். இங்கே தாய்க்குக் கவலையும் பெரிதாயிற்று. மகள் நினைவாகவே இருந்த அவள் ஒரு நாள் தனது தோழியும், மகளின் வளர்ப்புத் தாயுமாகிய செவிலியை அழைத்தாள். மகளின் வீடு சென்று, அங்கே அவள் என்ன செய்கிறாள்? எப்படிக் குடும்பம் நடத்துகிறாள்? ஒன்றும் தெரியாமல் விழிக்கிறாளா? துன்பப்படுகிறாளா? என்றெல்லாம் பார்த்து வருமாறு அனுப்புகிறாள். அதன்படி அங்கு சென்ற அவள் கண்ட காட்சி:

மகள் சமையல் செய்து கொண்டிருக்கிறாள். கணவன் வருவதற்குள் முடிக்க வேண்டுமே என்று அவசர அவசரமாகச் செய்கிறாள். கணவனுக்குப் பிடித்த மோர்க்குழம்பு வைக்க எண்ணுகிறாள்.

கட்டித் தயிரை எடுத்து, மத்தினால் கடையாமல் தன் கையாலேயே பிசைந்து மோர் ஆக்குகிறாள். காந்தள்மலர் போன்ற அந்தக் கையைத் தண்ணீரில் கழுவாமல், தன் உடையிலேயே துடைத்துக்கொள்கிறாள். அத்துணை அவசரம் அவளுக்கு! மோர் கொதித்தபின் தாளிக்கிறாள். எண்ணெயில் கடுகு வெடித்ததும், இறக்கிவைத்திருந்த மோரில் கொட்டிக் கலக்குகிறாள். 'குய்' என்ற ஓசையுடன் தாளிப்பின் மணங்கலந்த புகை அவளது குவளை போன்ற மைதீட்டிய கண்களில் படுகின்றது. இவள் சமையல் முடிக்கவும் கணவன் வரவும் சரியாயிருந்தது.

அவன் உண்ணத் தயாராய் வந்ததும், தன் கையாலேயே அவனுக்கு உணவு பரிமாறுகின்றாள். அவனும் ருசித்துச் சாப்பிடுகின்றான். மோர்க்குழம்பு நன்றாக உள்ளதென்று பாராட்டவும் செய்தான். அவள் தன் கையாலேயே துழாவிச் சமைத்த மோர்க்குழம்பைக் கணவன் விரும்பிச்சுவைத்து உண்டதோடல்லாமல், பாராட்டவும் செய்ததைக் கேட்டு, அவள் முகம் ஒளிபொருந்திய ஒரு மெல்லிய புன்னகையுடன் மலர்ந்த்தது.

இக்காட்சிகளையெல்லாம் கண்ட செவிலித்தாய், ஊர்திரும்பியதும் நற்றாயிடம் அவள் மகள் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்துகின்ற பாங்கை விவரிக்கிறாள். அந்தச் செய்யுள் இதோ:

"முளிதயிர்ப் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீ'இக்
குவளை உண்கண் குய்புகை கமழத்
தான்'துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே!"
(குறு - 167)

[முளிதயிர் - முற்றிய கட்டித்தயிர்;
கலிங்கம் - ஆடை;
உண்கண் - மைதீட்டிய கண்;
அட்ட - சமைத்த;
தீம்புளிப்பாகர் - இனிய புளிப்பை உடைய குழம்பு;
ஒண்ணுதல் - ஒளிபொருந்திய நெற்றியுடையவள்]

செவிலி கூறிய இச்செய்தியைக் கேட்டதும், அந்தத் தாயும் பெரிதும் மகிழ்ந்திருப்பாள் என்பதைக் கூறவும் வேண்டுமோ!