ஒரு தலைவி தான் தலைவனுடன் செல்லத்துணிந்த காரணங்களையும், அவ்வாறு உடன்செல்வதால் தனக்குண்டாகும் மிக்க மகிழ்ச்சியையும் கூறுவதாக அமைந்தது இப்பாடல்.
"இவ்வூரில் அலர், அதாவது எங்களைப் பற்றிய பழிமொழிகளை மக்கள் தூற்றுகின்றனர்; அதனால் தெருவெல்லாம் ஒரே ஆரவாரம்; இவற்றைக் கேட்ட தாய் ஓயாமல் என்னைத் துன்புறுத்துகிறாள். அதனால் நான் தலைவனுடன் செல்லத் துணிந்துவிட்டேன்! அறநெறியையும் உலக ஒழுக்கத்தையும் அறியாதவளாக இருக்கும் என் தாய், தானே இம்மனையில் இருக்கட்டும்!
"வானளாவ உயர்ந்து வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இப்பெரிய மலையின் ஒரு பக்கவாட்டில் உள்ள நெடுந்தூர நாட்டைச் சேர்ந்தவன் என் தலைவன். அம்மலைப் பகுதியில் பெரிய யானைகள் பலமுறை சென்று வருவதால், அவ்வழி பள்ளமாக உள்ளது; அதன் இருபக்கமும் உயர்ந்து கரும்பு நடுவதற்காக அமைத்த பாத்தி போலத் தோன்றுகின்றது. அப்பள்ளத்தில் எப்பொழுதும் நீர் தேங்கி உள்ளது. யானைகள் நடமாடும் இப்பாதையில் நான் தலைவனுடன் செல்லும்போது நெல்லிக்காய்களைத் தின்பேன்; பின் இப்பள்ளத்து நீரை முள்போன்ற என் பற்கள் தோன்றும்படிப் பருகுவேன்! இவ்வாறு யானைகளால் ஏற்படக் கூடிய அச்சத்தினை மறந்து, நெல்லிக்காயும் நீரும் உண்ணும் இனிமையை எண்ணி மகிழ்வோடு செல்வேன்" என்று தலைவி கூறுகிறாள்.
தன்னை அலைக்கழித்த தாய் தன் வீட்டிலேயே இருப்பாளாக என்றும், தான் தலைவனுடன் வழிநடைத்துன்பங்களை மறந்து மகிழ்வோடு செல்ல எண்ணுகிறேன் என்றும் தலைவி கூறிய இப்பாடலை இயற்றியவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ.
"ஊஉர் அலர்'எழச் சேரி கல்லென,
ஆறாது அலைக்கும் அறனில் அன்னை
தானே இருக்க, தன்மனை! யானே,
நெல்லி தின்ற முள்'எயிறு தயங்க
உணல் ஆய்ந்திசினால், அவரொடு; சேய்நாட்டு
விண்தொட நிவந்த விலங்கு மலைக்கவாஅன்
கரும்புநடு பாத்தி அன்ன
பெருங்களிற்று அடிவழி நிலை'இய நீரே!" [குறு - 262]
[கல்லென - ஆரவாரமுண்டாக;
ஆனாது - இடைவிடாது;
முள்'எயிறு - முள் போன்ற பல்;
ஆய்ந்திசின்'ஆல் - எண்ணுகிறேன்;
இசின் ஆல் - அசைநிலைகள்;
சேய்நாடு - தொலைதூரத்து நாடு;
நிவந்த - உயர்ந்த;
விலங்குமலைக்கவான் - குறுக்கே நின்று தடுக்கும் மலையினது பக்கம்]
Showing posts with label தானே இருக்க. Show all posts
Showing posts with label தானே இருக்க. Show all posts
Friday, September 11, 2009
Subscribe to:
Posts (Atom)