அகப் பொருளில் தலைவன் தலைவியை அவளது உறவினர் முதலிய யாருமறியாமல் கூடி மகிழ்வது 'களவு' எனப்படும்; பின்னர் ஊர் அறியத் திருமணஞ் செய்துகொண்டு இல்லற வாழ்வை மேற்கொள்ளுதல் 'கற்பு' எனப்படும். களவுக் காலத்தில், தலைவன் தலைவியிடம் 'உன்னைப் பிரியேன்; பிரியின் தரியேன்' என்றும், 'விரைவில் வரைந்து(மணந்து) கொள்வேன்' என்றும் அன்பு மொழிகள் கூறித் தெய்வத்தின்மேல் சூளுரைப்பது (சபதம் செய்வது) உண்டு.
இவ்வாறு ஒரு தலைவன் சூளுரைத்தான். பின்னர் 'நம் திருமணத்திற்காகப் பொருள் சேர்த்து வருவேன்' என்று கூறிப் பிரிந்தான். அவனால் குறித்த காலத்தில் வரமுடியவில்லை. அதனால் ஏக்கம் ஒரு பக்கம்; தெய்வத்தின் மேல் சூளுரைத்திருக்கிறானே! இப்படி வராமலிருப்பதால் தெய்வக்குற்றமேற்பட்டு, அவனுக்கு ஏதெனும் தீங்கு நேருமோ? என்ற அச்சம் ஒரு பக்கம்; இவற்றால் உண்டாகிய மனவருத்தம் ஒரு பக்கம். எனவே உடல் மெலியத் தொடங்கினாள் தலைவி.
தலைவி இல்லத்தின் முன்புறத்தில் நல்ல வெண்மையான மணற்பரப்பு; அதன் ஒருபக்கத்தில் ஒரு புன்கமரம். அதில் அரும்புகளும் மலர்களும் நிறைந்து பூத்துக் குலுங்கியது. வெண்மணற்பரப்பில் அம்மரத்தில் பூக்கள் ஏராளமாக எல்லாப்பக்கமும் உதிர்ந்து பரவிக் கிடந்தன.
அக்காலத்தில் வீட்டு முன்புறத்தில் ஏதேனும் வேண்டுதலை முன்னிட்டு முருகனுக்குத் திறந்தவெளியில் பூசை போடுவார்கள்; அந்த இடம் முழுவதிலும் வெண்மையான நெற்பொரியை வாரி இறைத்திருப்பார்கள்; பாடியும், ஆடியும் வழிபடுவார்கள். இவ்வறு பூசை போடுதலை 'வெறியாட்டு எடுத்தல்' அல்லது 'வெறி அயர்தல்' என்பர். இப்படி வெறியாட்டு எடுத்த களம் போல விளங்கியது, தலைவி இல்லத்தின்முன் புன்கமலர்கள் உதிர்ந்து பரவிக் கிடந்த தோற்றம்! மேலும் ஆற்று வெள்ளத்தால் ஒதுக்கப்பட்ட எக்கர் மணல்போல அப்பூக்கள் ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன.
இத்தகைய இல்லத்தின் முன்புறத்தில்தான் தலைவன் தலைவியின் மெல்லிய நேரான முன்கையைப் பற்றிக்கொண்டு, தெய்வ மகளிரின்மேல் சூளுரைத்தான்.
தலைவன் இவ்வாறு சூளுரைத்திருந்ததையும், தலைவியின் வருத்தத்தையும் அறிந்தவள் தோழி. ஆகையால், தலைவன் வந்தவுடன் அவனுக்குப் பின் வருமாறு கூறினாள்:
"மகிழ்ச்சியோடிருக்கும் தலைவனே! தலைவியை வரைந்து கொண்டு எங்களுக்கும் மகிழ்ச்சியைத் தாராமலிருக்கிறாய்! எங்கள் வீட்டின் முன்புறத்திலிருக்கும் வெண்மணற்பரப்பில்தான் நீ தலைவியின் முன்கையைப் பற்றிக்கொண்டு சபதம் செய்தாய்! தெய்வ மகளிரின்மேல் 'நின்னைப் பிரியேன்' என்று கூறிய அந்தச்சூளுரை நீ வராமலிருந்ததால் எங்களுக்கு மிகவும் அச்சத்தையும் வருத்தத்தையும் தந்தது. இனியேனும் காலத்தை நீட்டிக்காமல் விரைவில் தலைவியை மணமுடிப்பாயாக!" என்றாள். இக்கருத்தை விளக்கும் செய்யுள்:
"எம் அணங் கினவே, மகிழ்ந! முன்றில்
நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்
வேலன் புனைந்த வெறி'அயர் களந்தொறும்
செந்நெல் வான்பொரி சிதறி அன்ன
எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேர் இறை முன்கை பற்றிச்
சூர்'அர மகளிரோடு உற்ற சூளே!" (குறு - 53)
[அணங்கின - வருத்தம் உண்டாக்கின;
முன்றில் - வீட்டு முன்புறம்;
நனை - அரும்பு;
எக்கர் - ஆற்று வெள்ளம் ஒதுக்கிய மணல் மேடு;
சூர் - அச்சந்தரும்;
சூள் - சபதம்]
இச்செய்யுளை நமக்குத் தந்தவர் - கோப்பெருஞ்சோழன். பிசிராந்தையாரிடம் காணாமலே நட்புக் கொண்ட அதே சோழன்தான்.
Showing posts with label கோப்பெருஞ்சோழன். Show all posts
Showing posts with label கோப்பெருஞ்சோழன். Show all posts
Sunday, July 19, 2009
Subscribe to:
Posts (Atom)