Showing posts with label இனி அறிந்தேன். Show all posts
Showing posts with label இனி அறிந்தேன். Show all posts

Monday, September 28, 2009

18. இனி அறிந்தேன்

'இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்' என்பது இத்தொடரின் பொருள். தலைவி உடன்போக்கை விரும்புகிறாள் என்பதை, அவள் தன்னுடன் வீட்டிலிருக்கும்போது ஒரு செவிலித்தாய் உணரவில்லை. அவள் தலைவனுடன் உடன்போக்கை மேற்கொண்டபின், 'முன்னமே அவள் கூறிய சொற்களைக் கொண்டு இதனை அறியாமல் போனேனே' என்று வருந்துகிறாள்.

கடையெழு வள்ளல்களில் ஒருவன் ஆய் அண்டிரன் என்பவன். அவன் பொதிய மலைக்குத் தலைவன். அம்மலைப் பாங்கரில் வேங்கை, காந்தள், ஆம்பல் போன்ற மலர்கள் மிகுதியாக உள்ளன. நீர்வளம் மிக்க அப்பகுதியில் இப்பூக்கள் தோன்றி வளர்வதற்குக் கேட்கவா வேண்டும்! மலை முகடுகளில் எப்பொழுதும் மேகங்கள் தவழ்ந்து கொண்டிருக்கும். இத்தகைய மலைக்குத் தலைவனாகிய ஆய் சிறந்த வள்ளலாக இருந்ததோடு, வீரக்கழலும், தோள்வளையும் அணிந்த பெருவீரனாகவும் விளங்கினான்.

தலைவியும் இப்பகுதியைச் சேர்ந்தவள். அவள் அங்குள்ள நீர்நிலைகளில் நீராடுவதாலும், மலர்களை விரும்பி அணிவதாலும் அவளது உடல் வேங்கை, காந்தள் போன்ற மலர்களின் மணங்கமழும்; எப்பொழுதும் நீருக்குள்ளேயே இருக்கும் ஆம்பல் மலரைவிட அவளது உடல் குளிர்ச்சியுடையதாயிருந்தது.

செவிலித்தாய் கூறுகிறாள்: "தலைவியின் மேலுள்ள அன்பினால், அவளை நான் அடிக்கடி திரும்பத்திரும்பத் தழுவிக்கொள்வேன்; அப்பொழுதெல்லாம் அவள் 'எனக்கு வியர்க்கிறது' என்பாள். ஆம்பல் மலரை விடக் குளிர்ந்த உடலையுடைய இவள் 'வியர்த்தேன்' என்கிறாளே! என்ன அதிசயம்! என்று எண்ணினேன்; அப்பொழுது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை; ஆகையால் அத்துடன் விட்டு விட்டேன். ஆனால் இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது! தலைவன் மீதுள்ள அன்பினாலும், அவனுடன் செல்ல விரும்பியதாலும்தான் அவள் அப்படிக் கூறியிருக்கிறாள்; நான் தழுவுவதையும் வெறுத்திருக்கிறாள் என்பது!"

இந்தச் சுவையான பாடலை எழுதியவர் மோசிகீரனார்.

"பெயர்த்தனென் முயங்க,'யான் வியர்த்தனென்' என்றனள்;
இனியறிந்தேன் அது துனியா குதலே!
கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான்தண்ணியளே!" [குறு - 84]

[பெயர்த்தனென் - திரும்பவும்;
முயங்க - தழுவிக் கொள்ள;
துனியாகுதல் - வெறுப்படைதல்;
மழை - மேகம்;
நாறி - மணமுடையதாய்;
தண்ணியள் - குளிர்ந்திருப்பவள்]